9/11 தாக்குதல்களின்போது இந்தியர் ஒருவர் செய்த உதவி: வைரலாகும் செய்தி
Indian taxi driver’s 9/11 story goes viral: 9/11 தாக்குதல்களின்போது இந்தியர் ஒருவர் செய்த உதவி குறித்த செய்தி ஒன்று வைரலாகிவருகிறது.
அமெரிக்காவில் செப்டம்பர் 11ஆம் திகதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 25 ஆண்டுகள் ஆகின்றன.
இந்நிலையில், அந்த பயங்கரம் குறித்த தங்கள் அனுபவங்களை பலரும் இணையத்தில் பகிர்ந்துவருகிறார்கள்.
இந்தியர் ஒருவர் குறித்த வைரல் செய்தி Shabbos Kestenbaum என்னும் சமூக ஊடகப் பயனர், இந்திய டெக்சி சாரதி ஒருவர் 9/11 தாக்குதல்களின்போது செய்த உதவி குறித்த ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

அதாவது, 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி இரட்டைக்கோபுரங்கள் முதல் சில இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டபோது, குர்விந்தர் சிங் என்னும் இந்தியரான டெக்சி சாரதி, இரட்டைக் கோபுரங்களின் அருகே இருந்தாராம்.
அங்கிருந்து மக்களை அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சற்றும் சோர்வடையாமல் அழைத்துச் சென்றுள்ளார் சிங்.
விடயம் என்னவென்றால், அன்று மட்டுமல்ல, தாக்குதல் நிகழ்ந்த நாளிலிருந்து அடுத்த 40 நாட்களுக்கு நியூயார்க் மக்களை அவர்கள் சென்று சேரவேண்டிய இடங்களுக்கு தனது டெக்சி மூலம் கொண்டு சேர்த்துள்ளார் சிங்.
அது மட்டுமல்ல, அவர் யாரிடம் டெக்சி பயணத்துக்காக கட்டணமும் வாங்கவில்லையாம். ஒரு புலம்பெயர்ந்தோர் தன்னலம் கருதாமல் செய்த அந்த சேவையைப் பாராட்டி, அப்போதைய நியூயார்க் நகர மேயரான ரூடி கிலானி அவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

சிங் தன்னிடம் அந்தக் கடிதத்தைத் தன்னிடம் காட்டியதாக தெரிவிக்கும் Shabbos Kestenbaum, இன்று செப்டம்பர் 11ஆம் ஆண்டு தாக்குதல் நிகழ்ந்து 25ஆண்டுகள் ஆன தினம் என்பதால், அந்த செய்தியை சமூக ஊடகம் ஒன்றில் மீண்டும் பகிர்ந்துள்ளார்.
அதைப் படித்த பலரும் சிங்கை மனதார பாராட்டி வருகிறார்கள். உலகம் முழுவதும் புலம்பெயர்ந்தோர் மீது வெறுப்பு அதிகரித்துவருகிறது.
ஆனால், சிங் போன்ற புலம்பெயர்ந்தோருக்கு தக்க கௌரவம் வழங்கப்படவேண்டும் என்கிறார் ஒருவர்.
சிங், பல அமெரிக்கர்களை விட சிறந்த ஒரு அமெரிக்கர் என மற்றொருவர் கூற, இத்தகைய புலம்பெயர்தல் செய்திகள்தான் அமெரிக்காவுக்குத் தேவை, கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும் என்கிறார் இன்னொருவர்!