டைனோசரின் எலும்புகூட்டை ரூ.482 கோடிக்கு வாங்கியுள்ள நபர்
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததாக கருதப்படும் டைனோசர் என்ற உயிரினத்தை நாம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருப்போம்.
டைனோசரின் புதைப்படிவங்கள் அவ்வப்போது அரிதாக சில இடங்களில் அகழாய்வின் போது கண்டறியப்படுகிறது.
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கபட்ட டைனோசரின் எலும்புகூடு ரூ.482 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
ரூ.482 கோடிக்கு வாங்கப்பட்ட டைனோசரின் எலும்புகூடு
சுமார் 12.5 அடி (3.8 மீட்டர்) உயரமும் 38 அடி (11.5 மீட்டர்) நீளமும் கொண்ட கஸ்(GUS) என பெயரிடப்பட்டுள்ள இந்த டைனோசர் எலும்புக்கூடு, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைரனோசரஸ் ரெக்ஸ் மாதிரிகளில் மிகப்பெரிய மற்றும் மிகவும் முழுமையான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதில், கத்தி போன்ற கூர்மையான பற்களைக் கொண்ட தாடை, பாதுகாக்கப்பட்ட மண்டையோடு உள்ளது. மேலும், இதில் நன்கு பாதுகாக்கப்பட்ட 2 பாதங்களும், டி. ரெக்ஸ் புதைபடிவங்களில் அரிதாகக் காணப்படும் ஃபர்குலா அல்லது விஷ் போன் உள்ளிட்ட பல அரிய எலும்புகளும் அடங்கியுள்ளன.
டைரனோசரஸ் ரெக்ஸின் எலும்புக்கூடு, பல ஆண்டுகளாக ஏற்பட்ட பல்வேறு காயங்களின் அறிகுறிகளையும் காட்டுகிறது. அந்த எலும்புகளில், விலா எலும்பு மற்றும் வயிற்றுப் பகுதிக்கு அருகில் சில முறிந்த மற்றும் குணமடைந்த எலும்புகளும், மண்டை ஓட்டு எலும்புகளில் சில கடித் தடங்களும் காணப்படுகின்றன.

சோத்பீஸ் நிறுவனம் நடத்திய இந்த ஏலத்தில், 7 பங்கேற்பாளர்கள் கலந்து கொந்துள்ளனர். 20 - 30 மில்லியன் டொலருக்கு ஏலம் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 50.1 மில்லியன் டொலருக்கு(இந்திய மதிப்பில் சுமார் ரூ.482 கோடி) பெயர் வெளியிட விரும்பாத நபர் வாங்கியுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் ஹெட்ஜ் ஃபண்ட் முதலீட்டாளரான கென்னத் கிரிஃபின்,ஸ்டெகோசரஸ் “அபெக்ஸ்" எனப்பயிரிடப்பட்ட டைனோசர் எலும்புக்கூட்டை 44.6 மில்லியன் டொலருக்கு வாங்கியதே அதிகபட்சமாக இருந்தது.

இந்த புதைப்படிவம் Gary Gus Licking என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கண்டறியப்பட்ட நிலையில், இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த தொகை, அவர் மறைந்து விட்டதால் அவரது குடும்பத்திற்கு செல்லும்.
அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த புதைபடிவம், ஆராய்ச்சியாளர்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதால், கஸ்ஸை ஒரு பொது அருங்காட்சியகத்தில் வைக்குமாறு முதுகெலும்பி தொல்லுயிரியல் சங்கம் அதன் புதிய உரிமையாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. .
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |