Haka போராட்டத்தால் உலக மக்களின் கவனம் ஈர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனை
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் Haka நடனமாடி போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடுமையான தண்டனை
நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மிகக் கடுமையான தண்டனையாக இது கருதப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம் சர்ச்சைக்குரிய ஒப்பந்தக் கோட்பாடுகள் மசோதாவின் முதல் கூட்டத்தின் போது வாக்கெடுப்பு நடந்த நிலையில் Te Pāti Māori கட்சியின் மூன்று உறுப்பினர்கள் Debbie Ngarewa-Packer, Rawiri Waititi மற்றும் Hana-Rawhiti Maipi-Clarke ஆகியோர் பாரம்பரிய மாவோரி நடனமாடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உலகம் மொத்தம் கவனம் ஈர்த்த இந்த Haka போராட்டத்தின் இடையே மசோதாவின் நகல் ஒன்றை இளம் நாடாளுமன்ற உறுப்பினர் Maipi-Clarke கிழிப்பதும் உலகம் மொத்தம் தீயாக பரவியது.
1840 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட மாவோரி பூர்வகுடி மக்களுக்கும் பிரித்தானிய முடியாட்சிக்கும் இடையிலான நியூசிலாந்தின் ஸ்தாபக ஆவணமான வைடாங்கி ஒப்பந்தத்தை இந்த ஒப்பந்தக் கொள்கைகள் மசோதா தீவிரமாக மறுபரிசீலனை செய்ய முயன்றது.
ஆளும் அரசாங்கத்தின் கூட்டணி கட்சியான மைனர் லிபர்டேரியன் ஆக்ட் கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பிரேரணை, மாவோரி மக்களின் பல தசாப்த கால முன்னேற்றத்தை பின்னுக்குத் தள்ளும் என்பது குறித்து பரவலான எச்சரிக்கையைத் தூண்டியது.
இதுவே மாவோரி மக்களின் உரிமைகள் தொடர்பாக இதுவரை இல்லாத மிகப்பெரிய போராட்டத்தைத் தூண்டியது. ஆனால், ஏப்ரல் மாதம் நடந்த இரண்டாவது நாடாளுமன்றக் கூட்டத்தில் விவாதத்தை ஏற்படுத்திய அந்தப் பிரேரணை தோல்வியடைந்தது.
அவமதிக்கும் செயல்
ஆனால் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், சிறப்புரிமைகள் குழு இளம் உறுப்பினரான Maipi-Clarke என்பவருக்கு 7 நாட்களும், Ngarewa-Packer மற்றும் Waititi ஆகிய இருவரையும் மூன்று வாரங்களுக்கும் இடைநீக்கம் செய்ய பரிந்துரைத்தது.
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இதுவரை முன்னெடுக்கப்படாத நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மூவரின் செயல்கள் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தியிருக்கலாம் மற்றும் நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகவும் இருந்திருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெறும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின் போது, தற்காலிக இடைநீக்கங்கள் வாக்கெடுப்பு மூலம் உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இடைநீக்கத்தின் போது மூன்று எம்.பி.க்களும் தங்கள் சம்பளத்தைப் பெற மாட்டார்கள், மேலும் அடுத்த வார ஆண்டு பட்ஜெட் விவாதத்தின் போதும் அவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். இந்த முடிவுக்கு Te Pāti Māori கட்சி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |