மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள்: பட்ஜெட் தாக்கலை கிண்டலடித்த உதயநிதி
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில் அதனை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பேசியுள்ளார்.
பட்ஜெட் தாக்கல்
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் நேற்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது ஆட்சியில் நடைபெற்ற இரண்டாவது இடைக்கால பட்ஜெட் ஆகும்.
நேற்று, இந்த பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன்மூலம் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது மத்திய அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
உதயநிதி விமர்சனம்
இந்நிலையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பட்ஜெட்டை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க - பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த - மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங்களையும் அறிவிக்காமல், 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக் கொண்டே போவது மட்டும் தான் பாசிஸ்ட்டுகளின் சாதனை. இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்ட்டுகளை, இனி எக்காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |