அமைதி ஒப்பந்தத்தை மீறியதா ஹமாஸ்? ரஃபா மீது வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
போர் நிறுத்தத்திற்கு மத்தியில் காசாவின் ரஃபா பகுதி மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல்
போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் போது காசாவின் தெற்கு பகுதியில் உள்ள ரஃபா நகரின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியதை தொடர்ந்து இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய செய்தி நிறுவனமான சேனல் 12 வெளியிட்ட தகவலில், ரஃபா நகரில் செயல்பட்டு வந்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் பொறியியல் பிரிவு மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து இஸ்ரேலின் வான் வழித் தாக்குதல் பதிலடி கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மூன்று தனித்தனி வான் வழித் தாக்குதலாக இவை நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெதன்யாகு ஆலோசனை
போர் நிறுத்தத்திற்கு மத்தியில் காசாவில் ஏற்பட்டுள்ள இந்த பதற்ற நிலை குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தொலைபேசி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அதே சமயம், பொறியியல் பிரிவு மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு படை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு சற்று முன்னதாக, ஹமாஸ் அமைதி ஒப்பந்தத்தை மீறி இருப்பதாகவும், பாலஸ்தீன மக்களை தாக்க ஹமாஸ் திட்டமிட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டி அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |