கொல்லப்பட்ட ஹமாஸின் முக்கிய தளபதி: இஸ்ரேல் நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்
காசாவில் இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதி கொல்லப்பட்டுள்ளார்.
ஹமாஸ் தளபதி உயிரிழப்பு
காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதி சக்ர் அபு கரீம் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்ட தளபதி சக்ர் அபு கரீம் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இஸ்ரேலிய படையினர் மீது சமீப காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களிலும் இவர் மூளையாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தளபதி சக்ர் அபு கரீம் ஹமாஸ் அமைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக IDF தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய படையினர் நடத்திய இந்த சமீபத்திய வான்வழித் தாக்குதலில் மற்றொரு ஹமாஸ் போராளியும் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் ஒலித்த சைரன்கள்
இதற்கிடையில் இஸ்ரேலின் வடக்கு பகுதியை குறிவைத்து லெபனானில் இருந்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில், இஸ்ரேலின் யிஃப்தா மற்றும் ராமோட் நாஃப்தலி ஆகிய பகுதிகளில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன.
லெபனானில் இருந்து ஏவப்பட்ட இந்த இரண்டு ஏவுகணைகளையும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக இடைமறித்து அழித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |