காஸா ஆளுநராக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமருக்கு ஹமாஸ் எதிர்ப்பு
காஸா மீதான போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு, போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது.
முற்றாக நிராகரித்த
இஸ்ரேல் நிர்வாகத்தின் இந்த ஒப்புதலானது தற்போது ஜனாதிபதி ட்ரம்பின் விரிவான அமைதித் திட்டத்தின் முதல் கட்டம் அமுலுக்கு வர வழி வகுத்துள்ளது. மேலும், இஸ்ரேலிய துருப்புக்கள் பின்வாங்கியவுடன், 72 மணி நேரத்தில் பணயக்கைதிகளை ஹமாஸ் படைகள் ஒப்படைப்பதற்கான கவுண்ட்டவுன் தொடங்குகிறது.
ஆனால் ட்ரம்ப் முன்வைத்துள்ள மிக முக்கியமான நிபந்தனை ஒன்றை ஹமாஸ் படைகள் முற்றாக நிராகரித்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
போருக்கு பின்னர் அமைதியை நிலைநாட்டவும் காஸாவை நிர்வகிக்கவும் நிர்வாகிகள் குழு ஒன்றை ட்ரம்ப் மற்றும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் சர் டோனி பிளேர் தலைமையில் அமைக்கப்படும் என ட்ரம்ப் தமது 20 அம்ச அமைதி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தார்.
காஸாவின் ஆளுநராக டோனி பிளேர் செயல்படுவார் என்றே ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், அப்படியான முன்னெடுப்பை ஹமாஸ் நிர்வாகம் முற்றாக நிராகரித்துள்ளது. ஹமாஸ் படைகள் மட்டுமின்றி, பாலஸ்தீனத்தில் செயல்படும் முக்கியமான குழுக்கள், அத்துடன் பாலஸ்தீன நிர்வாகமும் டோனி பிளேர் நிர்வாகத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ட்ரம்ப் தனது 20 அம்ச அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனத்தில் இருந்து இந்த வெளிப்படையான கண்டனம் வெளிவந்துள்ளது.
2,000 பாலஸ்தீன கைதிகள்
மேலும், மத்தியஸ்தர்கள் மற்றும் அமெரிக்க நிர்வாகத்திடமிருந்து உறுதியான உத்தரவாதங்களைப் பெற்றுள்ளதாகவும், போர் முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிட்டது என்பதை இவை அனைத்தும் உறுதிப்படுத்துவதாகவும் ஹமாஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து, இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீன மக்கள் விடுவிக்கப்படுவார்கள்.
இஸ்ரேலில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள 250 பேர்கள் உட்பட 2,000 பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் விடுவிக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் இராணுவதின் தொடர் தாக்குதல்களால் தரைமட்டமான நகரங்களில் இருந்து தற்போது முகாம்களில் வசிக்கும் காஸா மக்களுக்கு நாள் ஒன்றிற்கு 600 லொறிகள் நிவாரணப் பொருட்களை அனுமதிக்கவும் முடிவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |