விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதா?
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் ரூ.5 கோடி மதிப்பிலான இரண்டு வெளிநாட்டு கைக்கடிகாரங்களைப் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியான நிலையில் அது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
துபாயில் இருந்து திரும்பியபோது மும்பை விமான நிலையத்தில் ஹர்திக் பாண்டியாவிடம் இந்த கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இதனை மறுத்துள்ள ஹர்திக் பாண்டியா, என்னிடமிருந்து இரண்டு கைக்கடிக்காரங்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. ரூ.1.5 கோடி மதிப்பிலான ஒரே ஒரு கைக்கடிகாரம் மட்டுமே என்னிடம் இருந்தது.
அதுவும், விமான நிலையத்து வந்ததும் நானே முன்வந்து சுங்கத் துறை அதிகரிகாளிடம் சென்று நான் கைக்கடிகாரம் கொண்டு வந்திருக்கும் தகவலைத் தெரிவித்தேன். ஆனால், சமூக ஊடகங்களில் நான் ஏதோ ஏமாற்றும் நோக்கில் கைக்கடிகாரத்தை மறைத்துக் கொண்டு வந்ததுபோல் தகவல் வெளியாகியிருக்கிறது.
— hardik pandya (@hardikpandya7) November 16, 2021
நான் அந்தக் கைக்கடிகாரத்தை துபாயில் வாங்கினேன். அதற்கான சுங்க வரியை எங்கு கட்டச் சொன்னாலும் அதனைக் கட்ட நான் தயாராகவே இருந்தேன். நான் கடிகாரத்தைப் பற்றி சொன்னவுடன் அவர்கள் என்னிடம் அதற்கான ஆவணங்களைக் கேட்டனர்.
நான் ஆவணங்களைக் கொடுத்துள்ளேன். அவர்கள், அதற்கான சுங்க வரி மதிப்பீட்டைச் செய்து வருகின்றனர். அவர்கள் மதிப்பிட்டு தொகையைச் சொன்னவுடன் நான் வரியைச் செலுத்தப் போகிறேன்.
நான் தேசத்தின் சட்டத்தை மதித்து நடக்கும் நபர். நான் அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளையும் மதிக்கிறேன். எனது கோரிக்கைகளுக்கு சுங்கத் துறையினர் ஒத்துழைப்பு தந்துள்ளனர். நானும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன்.
நான் சட்டத்தை மீறிவிட்டதாக பரவும் தகவல்கள் அனைத்தும் பொய் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.