9 வயதில் தேசிய சாம்பியன் பட்டம்! மீண்டும் சாதனை படைக்க களமிறங்கும் எட்டு மாத கர்ப்பிணி
தமிழகத்தில் நாளை தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில், நிறைமாத கர்ப்பிணியான ஹரிகா துரோனவள்ளி களமிறங்குவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை தொடங்குகிறது. இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்தியா சார்பில் 30 வீரர், வீராங்கனைகள் 6 அணிகளாக களமிறங்குகின்றனர். ஆந்திராவைச் சேர்ந்த ஹரிகா துரோனவள்ளி (31) என்ற பெண்ணும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள உள்ளார்.
thenewsminute
தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக உள்ள ஹரிகா, மூன்று முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். மேலும், இந்திய அரசின் அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றுள்ள இவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
நிறைமாத கர்ப்பமாக இருப்பதையும் பொருட்படுத்தாமல் சாதிக்கும் எண்ணத்துடன் களமிறங்கியுள்ள ஹரிகா, மனரீதியாக எந்தவித மாற்றமும் இன்றி இயல்பாக இருப்பதாகவும், உடல் ரீதியாக சிக்கல்கள் வரலாம், ஆனாலும் அதனை மீறி வெல்வேன் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு செஸ் போட்டி அரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், சிறப்பு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக்குழு ஆகியவை தயார் செய்யப்பட்டுள்ளன.
தனது 9 வயதில் தேசிய சாம்பியன் பட்டம் வென்ற ஹரிகா, 13 வயதில் இருந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வெல்ல போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
FIDE Photo