இங்கிலாந்துக்கு சொந்த மண்ணில் அடிகொடுத்த இந்திய மகளிர்படை! இரண்டு தொடர்களைக் கைப்பற்றி சாதனை
மகளிர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.
ஹர்மன்பிரீத் சதம்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய மகளிர் இந்திய அணி, ரிவர்சைடு மைதானத்தில் நேற்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் ஆடியது.
முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 318 ஓட்டங்கள் குவித்தது. சதம் விளாசிய அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் 84 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 102 ஓட்டங்கள் குவித்தார்.
ஜெமிமா ரோட்ரிகஸ் (Jemimah Rodrigues) 45 பந்துகளில் 50 ஓட்டங்களும், ஸ்ம்ரிதி மந்தனா 54 பந்துகளில் 45 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனைகள் சொதப்பினாலும், எம்மா லாம்ப் மற்றும் நட் சிவர் பிரண்ட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தக் கூட்டணி 162 ஓட்டங்கள் குவிக்க, எம்மா லாம்ப் (Emma Lamb) 68 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
சதத்தை தவறவிட்ட அணித்தலைவர்
அடுத்து அணித்தலைவர் நட் சிவர் பிரண்ட் 98 ஓட்டங்களில் அவுட் ஆகி சதத்தை தவறவிட்டார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கௌட்டின் மிரட்டலான பந்துவீச்சில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இறுதியில் 49.5 ஓவரில் 305 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து ஆல்அவுட் ஆக, இந்தியா 13 ஓட்டங்களில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை வென்றது.
அலிஸ் டேவிட்ஸன் 44 (34) ஓட்டங்களும், டங்க்லே 34 (36) ஓட்டங்களும் எடுத்தனர்.
கிராந்தி கௌட் (Kranti Goud) 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இந்திய அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur) ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி விருதுகளை பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |