ஹார்வர்டில் இனி வெளிநாட்டு மாணவர்களுக்கு வாய்ப்பில்லை... ட்ரம்ப் நிர்வாகம் தீவிரம்
ட்ரம்ப் நிர்வாகத்தின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்களின் சேர்க்கை முடக்கப்படலாம் என அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
ஒத்துழைக்க மறுத்தால்
ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் தொடர்பில் தகவல்களை ட்ரம்ப் நிர்வாகம் கோரியிருந்தது. ஆனால், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இதுவரை முடிவெடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கான பெடரல் நிதி மொத்தம் 2.7 பில்லியன் டொலர் தொகையை முடக்கியுள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலாளர் கிறிஸ்டி நோயம் அறிவித்துள்ளார்.
மேலும் ஏப்ரல் 30ம் திகதிக்குள் ஹார்வர்டின் வெளிநாட்டு மாணவர் விசா வைத்திருப்பவர்களின் சட்டவிரோத மற்றும் வன்முறை நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை தங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என கடிதம் எழுதியுள்ளதாகவும் கிறிஸ்டி நோயம் தெரிவித்துள்ளார்.
ஆனால் தங்களுடன் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் ஒத்துழைக்க மறுத்தால், அவர்கள் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் சலுகையை இழப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் தனது சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கவோ அல்லது அரசியலமைப்பு உரிமைகளை விட்டுக்கொடுக்கவோ கூடாது என்ற வாரத்தின் தொடக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் உறுதியாக இருப்பதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
யூத விரோதி
அமெரிக்க நட்பு நாடான இஸ்ரேலின் காஸா மீதான பேரழிவுகரமான இராணுவத் தாக்குதலுக்கு எதிரான பாலஸ்தீன சார்பு வளாகப் போராட்டங்கள் தொடர்பாக, ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் பல்கலைக்கழகங்களுக்கு பெடரல் நிதியை முடக்குவதாக அச்சுறுத்தியுள்ளது.
மேலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை யூத விரோதிகளாகவும் ஹமாஸ் படைகளுக்கு அனுதாபம் கொண்டவர்களாகவும் வெளிவிவகாரக் கொள்கைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களாகவும் ட்ரம்ப் நிர்வாகம் அடையாளப்படுத்தியுள்ளது.
ஆனால் ட்ரம்ப் நிர்வாகம் பாலஸ்தீன உரிமைகளுக்கான தங்கள் வாதத்தை தவறாக சித்தரிப்பதாக சில யூத குழுக்கள் உட்பட போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ட்ரம்ப் நிர்வாகம் சில வெளிநாட்டு மாணவர்களை நாடு கடத்த முயற்சி மேற்கொண்டுள்ளதுடன் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான விசாக்களையும் ரத்து செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |