2.2 பில்லியன் டொலர் மானிய முடக்கம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வழக்கு
அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகமான ஹார்வர்ட், டிரம்ப் நிர்வாகத்தின் சர்ச்சைக்குரிய நடவடிக்கையான 2.2 பில்லியன் டொலர் கூட்டாட்சி மானிய முடக்கத்திற்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும், நிர்வாக சீர்திருத்தங்களை அமல்படுத்தவும் டிரம்ப் நிர்வாகம் விடுத்த உத்தரவுகளுக்கு ஹார்வர்ட் இணங்க மறுத்ததே மானிய நிறுத்தத்திற்கு முக்கிய காரணமாகும்.
சர்ச்சைக்குரிய நிர்வாக உத்தரவுகள்
இந்த மோதலின் தொடக்கம், டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்டுக்கு அனுப்பிய கடிதத்தில் அடங்கியுள்ளது.
அக்கடிதத்தில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் விரிவான நிர்வாக மற்றும் ஆட்சி சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும், மாணவர் சேர்க்கை நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும், பல்கலைக்கழக வளாகத்தில் பன்முகத்தன்மை குறித்த ஆய்வுகளை நடத்த வேண்டும் மற்றும் சில மாணவர் அமைப்புகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனப் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஹார்வர்ட்டின் அதிரடி பதில்
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த கோரிக்கைகளுக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆலன் கார்பர் பகிரங்கமாக மறுப்பு தெரிவித்தார்.
இதன் விளைவாக, அமெரிக்க அரசு ஹார்வர்டுக்கு வழங்கி வந்த பில்லியன் கணக்கான டொலர் மானியங்களை நிறுத்தி வைத்தது.
நீதிமன்றத்தில் ஹார்வர்ட்டின் வாதம்
பாஸ்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் பின்வருமாறு வாதிட்டது.
அதில், அமெரிக்க மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், உலகளாவிய கண்டுபிடிப்புகளில் அமெரிக்காவின் தலைமைத்துவத்தைத் தக்கவைப்பதற்கும் முக்கியமான மருத்துவ, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற ஆராய்ச்சி முயற்சிகளுக்கும், யூத வெறுப்பு தொடர்பான கவலைகளுக்கும் இடையே எந்தவொரு தர்க்கரீதியான தொடர்பையும் அரசாங்கம் நிறுவத் தவறிவிட்டது.
மேலும், பில்லியன் கணக்கான டொலர் மதிப்பிலான கூட்டாட்சி ஆராய்ச்சி நிதியை காலவரையின்றி நிறுத்தி வைப்பதால் ஹார்வர்டின் ஆராய்ச்சித் திட்டங்கள், அந்த ஆராய்ச்சியின் பயனாளிகள் மற்றும் அமெரிக்காவின் புதுமை மற்றும் முன்னேற்றத்திற்கான தேசிய நலன் ஆகியவற்றில் ஏற்படும் குறிப்பிடத்தக்க விளைவுகளை அரசாங்கம் கருத்தில் கொள்ளவில்லை." என குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |