இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் IT நிறுவன CEO பட்டியல் - முதலிடத்தில் தமிழ்நாடு நபர்
இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் IT நிறுவன CEO பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த விஜயகுமார் முதலிடத்தில் உள்ளார்.
அதிக சம்பளம் பெறும் இந்திய IT நிறுவன CEO
ஹெச்சிஎல் டெக் (HCL Tech) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, சி விஜயகுமார் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
தற்போது, அவரது நியமனம் வரும் மார்ச் 31, 2030 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக HCL Tech நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் அதிக சம்பளம் பெரும் IT நிறுவன CEO பட்டியலில், HCL Tech CEO விஜயகுமார் தொடர்ந்து 2வது ஆண்டாக முதலிடம் பெற்றுள்ளார்.
ஊதியம் என்ன?
57 வயதான விஜயகுமார், 2025 நிதியாண்டில் 94.6 கோடி ஊதியமாக பெற்றுள்ளார்.
இதில் அடிப்படை ஊதியமாக ரூ.15.8 கோடியும், செயல்திறன் சார்ந்த போனஸாக ரூ.13.9 கோடியும், நீண்ட கால கட்டுப்படுத்தப்பட்ட பங்கு அலகுகள் (RSU) மூலம் ரூ.56.9 கோடியும், கூடுதல் போனஸ் ரூ.1.7 கோடியும் பெற்றுள்ளார்.
முந்தைய நிதியாண்டில் ரூ.84.17 கோடி ஊதியம் பெற்றுள்ளார். மேலும், 2026 நிதியாண்டில் அவருக்கு 154 கோடி ஊதியம் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த விஜயகுமார்?
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்த விஜயகுமார், பள்ளிக்கல்வியை ஊட்டியிலும், மின் மற்றும் மின்னணு பொறியியலில் பட்டப்படிப்பை PSG தொழில்நுட்பக் கல்லூரியிலும் படித்துள்ளார்.
1994 ஆம் ஆண்டு, HCL டெக்னாலஜிஸின் HCL Comnet இல் மூத்த பொறியாளராக பணியில் சேர்ந்த அவர், 2016 ஆம் ஆண்டு COO ஆகவும், அதே ஆண்டில் 2 மாதங்களுக்கு பின்னர் CEO ஆகவும் நியமிக்கப்பட்டார்.
2016 ஆம் ஆண்டில் அவர் தலைமை பொறுப்பேற்ற பின்னர், HCL நிறுவனம் தனது போட்டி நிறுவனங்களை விட வளர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த நிதியாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் ரூ.82 கோடியும், விப்ரோ தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாஸ் பல்லியா ரூ.53.60 கோடியும், டெக் மஹிந்திராவின் தலைமை நிர்வாக அதிகாரி மோஹித் ஜோஷி, ரூ.52.1 கோடியும், டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி கீர்த்திவாசன் ரூ.26.5 கோடியும் பெற்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |