ரூ.45 கோடியை மறைக்க ரூ.24,000 கோடியை இழந்த மிகப்பெரிய தனியார் வங்கி
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎப்சி (HDFC Bank), தற்போது ஒரு பெரும் கார்ப்பரேட் நிர்வாகச் சிக்கலில் சிக்கியுள்ளது.
கூடுதல் வட்டி
மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்திற்கு (MSRDC) வழங்கப்பட்ட ரூ.45 கோடி தொகையில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரும், அதனைத் தொடர்ந்து வங்கியின் பங்குகள் சரிவும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர அரசு நிறுவனமான MSRDC, ஹெச்டிஎப்சி வங்கியில் டெபாசிட் செய்திருந்த பெரிய அளவிலான தொகைக்கு, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைத் தாண்டி கூடுதல் வட்டி (Differential Interest) வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
வங்கியின் தணிக்கைக் குழு (Audit Committee) நடத்திய உள் நிர்வாக விழிப்புணர்வு விசாரணையில் (Internal Vigilance Investigation), இந்த கூடுதல் வட்டித் தொகையான ரூ.45 கோடியை, நேரடியாக வட்டி கணக்கில் காட்டாமல், வங்கியின் விளம்பரம் மற்றும் மார்கெட்டிங் செலவு (Marketing Expenses) போல கணக்குக் காட்டி மறைக்க முயன்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதற்காக போலியான விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் முறையற்ற இன்வாய்ஸ்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் கடந்த நிதியாண்டுகளில் நடந்துள்ள நிலையில், வங்கியின் விளம்பரத் துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என உள் தணிக்கையில் மதிப்பிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 12-ம் திகதி வங்கியின் தணிக்கைக் குழு முறையான விழிப்புணர்வு விசாரணைக்கு உத்தரவிட்டது. தடாலடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே, அதாவது மார்ச் 18ம் திகதி, ஹெச்டிஎப்சி வங்கியின் முன்னாள் தலைவர் அடானு சக்ரவர்த்தி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
பங்கு விலை
வங்கியில் நடைபெறும் சில நடைமுறைகள் தனது தனிப்பட்ட நெறிமுறைகளுக்கு உகந்ததாக இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த ரூ.45 கோடி விவகாரமே அவரது வெளியேற்றத்திற்குக் காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பான தகவல் கசிந்த உடனே, பங்குச் சந்தையில் ஹெச்டிஎப்சி வங்கியின் பங்குகளை முதலீட்டாளர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு விற்கத் தொடங்கினர்.
புதன்கிழமை வர்த்தகத்தில், ஹெச்டிஎப்சி வங்கியின் பங்கு விலை சுமார் 2.45 சதவீதம் வரை சரிந்து, ஒரு பங்கின் விலை ரூ.759.80 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.
முதலீட்டாளர்கள் மத்தியில் ஹெச்டிஎப்சி வங்கியின் கார்ப்பரேட் நிர்வாகத் தரம் மற்றும் கணக்கு வழக்குகளின் நம்பகத்தன்மை குறித்த கவலைகளால், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் சுமார் ரூ.24,000 கோடிக்கும் அதிகமான சந்தை மதிப்பு (Market Capitalization) இழப்பு ஏற்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |