ஈரான் விவகாரத்தில்... இன்னொரு வளைகுடா நாட்டிற்கு கடும் மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டால், அமெரிக்காவின் கடும் கோபத்திற்கு இலக்காக நேரிடும் என ஓமன் நாட்டிற்கு டொனால்ட் ட்ரம்ப் கடும் மிரட்டல் விடுத்துள்ளார்.
தகர்த்துவிடுவோம்
ஹார்முஸ் விவகாரத்தில் ஓமன் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மிரட்டல் வளைகுடா பிராந்தியத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானும் அதன் அண்டை நாடான ஓமனும் ஹார்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்த அனுமதிக்கும் ஒரு குறுகிய கால ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வீர்களா என்று ட்ரம்பிடம் கேட்கப்பட்ட நிலையில்,
அமெரிக்காவிற்கு கட்டுப்பட்டு ஓமன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் அந்த நாட்டைத் தகர்த்துவிடுவோம் என ட்ரம்ப் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
மேலும், ஹார்முஸ் நீரிணையானது அனைவருக்கும் பொதுவானது என்றும், அதில் அனைத்து நாட்டினரும் பயன்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.
மட்டுமின்றி, ஹார்முஸ் நீரிணை என்பது சர்வதேச கடல் பகுதி; ஓமன் மற்ற நாடுகளையும் போலவே நடந்துகொள்ளும், இல்லையெனில், நாங்கள் அவர்களைத் தகர்க்க வேண்டியிருக்கும். இதை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்; எனவே, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில், ஜனாதிபதி ட்ரம்ப், தங்களின் நட்பு நாடான ஓமன் தொடர்பில் மிரட்டல் விடுத்தாரா இல்லை, ஈரானுக்குப் பதிலாக ஓமன் என குறிப்பிட்டாரா என்பது தொடர்பில் ஊடகவியலாளர்களின் குழப்பத்திற்கு வெள்ளை மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்படவில்லை.

வருவாயை ஓமனுடன்
வளைகுடாவில் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான ஓமன், மத்திய கிழக்கு போரில் மத்தியஸ்தம் செய்ய முயன்றதுடன், ஈரானின் தாக்குதலுக்கும் இலக்காகியுள்ளது.
இதனிடையே, அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் பின்னர், ஓமன் குறித்த ட்ரம்பின் கருத்துகளின் காணொளி மற்றும் எழுத்துப்படிவத்தை, எந்தவொரு திருத்தமோ விளக்கமோ இன்றி வெளியிட்டது.

முன்னதாக, ஹார்முஸ் நீரிணையைக் கடந்து செல்லும் கப்பல்களிடம் சுங்கம் வசூலித்து, அதன் வருவாயை ஓமனுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஒரு புதியக் கொள்கையை வகுக்க விரும்புவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, அதற்கான விதிமுறைகளையும் ஈரான் வகுத்து வருகிறது. இந்த நிலையில், மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்திற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டு விட்டது என்று ட்ரம்ப் கூறிய சில நாட்களுக்குப் பிறகு, மீண்டும் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதாகத் தோன்றுவதால் ட்ரம்ப் மிகுந்த விரக்தியடைந்துள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |