வேறு வழி தெரியவில்லை... 9 வயது மகளை முதியவருக்கு திருமணம் செய்து வைத்த தந்தை கண்ணீர்
ஆப்கானிஸ்தானில் சிறுமியான சொந்த மகளை குடும்பத்தின் பொருளாதார நிலை கருதி முதியவருக்கு விற்பனை செய்த தந்தை தற்போது தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 55 வயது முதியவருக்கு தமது 9 வயது மகளை விற்பனை செய்துள்ளார் அப்துல் மாலிக் என்பவர். அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் இந்த குடும்பம் தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியில் போதிய வேலை வாய்ப்பு ஏதுமின்றி ஒருவேளை உணவுக்கே போராடி வருகிறது.
இந்த நிலையிலேயே பர்வானா மாலிக் என்ற தமது 9 வயது மகளை வெறும் 2,200 டொலர் மதிப்பிலான ஆட்டு மந்தை, நிலம் மற்றும் ரொக்கத் தொகைக்காக விற்பனை செய்துள்ளார் அப்துல் மாலிக்.
8 பேர் கொண்ட குடும்பம் மூன்று வேளையும் பட்டினியால் அவதிப்படுவதை தம்மால் பொறுக்க முடியவில்லை எனவும், மகளை விற்பனை செய்வது மட்டுமே தமக்கு இருக்கும் ஒரே வழி என்பதாலும், கனத்த இதயத்துடன் அந்த நபருக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அப்துல் மாலிக் தெரிவித்துள்ளார்.
ஆனால், தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், சர்வதேச நாடுகள் தற்போது பொருளாதார உதவிகளை நிறுத்தி வைத்துள்ளதால், ஆப்கானிஸ்தானில் பரவலாக பசி மற்றும் விரக்தியால், அதிகமான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக மனித உரிமைகள் குழுக்கள் கூறுகின்றன.
சிறுமி பர்வானா மாலிக் அந்த 55 வயது முதியவருடன் செல்ல மறுத்து வந்தாலும், இறுதியில் வலுக்கட்டாயமாக அந்த நபர் சிறுமியை கொண்டு சென்றுள்ளார்.
தமது குடும்பத்தில் ஒருவராக சிறுமியை தாம் பார்த்துக்கொள்ள இருப்பதாகவும், ஆனால் மிகவும் மலிவான விலைக்கு வாங்கப்பட்டதால், வீட்டு வேலைக்கு பயன்படுத்த இருப்பதாகவும் அந்த 55 வயது முதியவர் தெரிவித்துள்ளார்.