50 சாத்தான் - 2 ஏவுகணைகள்... மேற்கத்திய நாடுகள் இருக்கும் இடங்களில் பெரிய பள்ளம்தான் இருக்கும்: எச்சரிக்கும் ரஷ்ய விண்வெளி மைய தலைவர்
வரும் இலையுதிர் காலத்துக்குள் 50 சாத்தான் - 2 ஏவுகணைகளை ரஷ்யா தயார் செய்ய இருப்பதாக ரஷ்ய விண்வெளி மையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
அந்த ஏவுகணைகளைக் கொண்டு தாக்கினால், மேற்கத்திய நாடுகள் இருந்த இடங்களில் பெரிய பள்ளங்கள்தான் இருக்கும் என்று எச்சரித்துள்ள ரஷ்ய ஏவுகணை ஏஜன்சியின் தலைவரான Dmitry Rogozin, அது நடந்தால் எப்படி இருக்கும் என்று காட்டுவதற்காக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ஒரு ஏவுகணை தாக்கியதால் ஏற்பட்ட 26 அடி ஆளுமும் 66 அடி அகலமும் கொண்ட ஒரு பள்ளத்தைக் காட்டும் Dmitry, இந்த நிலைதான் ரஷ்யாவிடம் மரியாதை இல்லாமல் நடந்துகொள்ளும் அனைவருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
14 மாடிக் கட்டிடம் அளவுக்கு உயரமும், 208 டன் எடையும் கொண்ட அந்த சாத்தான் - 2 ஏவுகணை, அணு குண்டு இல்லாமல் வீசப்பட்டபோதே இவ்வளவு சேதத்தை ஏற்படுத்துமானால், அணுகுண்டுடன் அது வீசப்பட்டால் இன்னும் பெரிய, ஆழமான பள்ளத்தை ஏற்படுத்துவதுடன், அணுக்கதிர் வீச்சையும் ஏற்படுத்தும் என்கிறார் Dmitry.
அது போல, ஒன்று இரண்டு அல்ல, 50 ஏவுகணைகளைத் தாங்கள் தயார் செய்ய இருப்பதாகத் தெரிவிக்கும் Dmitry, ஆகவே, ரஷ்யாவுடன் பேசும்போது எதிர்ப்பாளர்கள் இன்னும் மரியாதையாக பேசவேண்டும் என்று கூறியுள்ளார்.