சசிகலா உடல் நிலை எப்படி இருக்கு? சற்று முன் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்தவரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா சொத்து குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இவரின் நான்கு ஆண்டுகால சிறை தண்டனை முடிவடைந்து வரும் 27-ஆம் திகதி விடுதலையாகவிருக்கிறார்.
இந்நிலையில் இவரின் உடல்நிலை மோசமானதால், அங்கிருக்கும் பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சசிகலாவிற்கு ஆன்டிஜென் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
மேலும் அவர் உடல் நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு சசிகலாவிற்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவுக்கு அவர் உடனடியாக மாற்றப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டதாகவும், அதன் பின் அவர் சாதரண வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் செய்தி வெளியானது.
சசிகலா உடல்நிலை குறித்து பவுரிங் மருத்துவமனை இயக்குநர் மனோஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
'மூச்சுத்திணறல் காரணமாக அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது அதோடு மருந்துகளும் தரப்பட்டன. அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ஐ.சி.யூ-வில் கண்காணிப்புக்காக மட்டுமே வைத்திருக்கிறோம். அவரின் ஆக்சிஜன் அளவு 96 இருக்கிறது. அவருக்குக் காய்ச்சல் குறைத்துள்ளது. தற்போது சசிகலாவால் நடக்க முடிகிறது. காலை உணவை எடுத்துக்கொண்டிருக்கிறார். தற்போது அவரின் உடல்நிலையில் எந்தப் பிரச்சனையும் இல்லை.மூச்சுத் திணறல் எதுவும் இல்லை. அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்க இருக்கிறோம். சி.டி ஸ்கேன் முடிவுகளை வைத்து அடுத்தகட்ட சிகிச்சை குறித்து முடிவு செய்யவுள்ளோம். அடுத்த இரண்டு மூன்று நாள்களுக்கு அவர் மருத்துவமனையில் இருப்பார்' என்று தெரிவித்திருந்தார்.
மேலும், மேலும், பவுரிங் அரசு மருத்துவமனையில் உள்ள சி.டி ஸ்கேன் இயந்திரம் இயங்காததால், சசிகலாவை விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சி.டி ஸ்கேன் எடுக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.
இதையடுத்து, தற்போது சசிகலாவுக்கு நுரையீரலில் தொற்று இருப்பது சி.டி.ஸ்கேனில் தெரியவந்திருப்பதாகவும், இதனால் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம், சசிகலா உடல்நிலை குறித்து சற்று முன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அவர் உடல் நிலை சீராக இருப்பதாகவும், சர்க்கரை நோய், தைராய்டு, இரத்த அழுத்தம் போன்றவைகளுக்காக சசிகலாவுக்கு தொடர்ந்து ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.


