நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சுவையான பூண்டு குழம்பு
நம் உணவில் சேர்க்கப்படும் பூண்டில் அதிகளவில் மருத்துவ குணம் உள்ளது. பூண்டு மழைக்காலங்களில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏன்னென்றால், மழைக்காலங்களில் நோய் தொற்றுக்கள் அதிகமாக பரவும்.
அதனால், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது பல நோய்கள் நம்மை தாக்கிவிடும். இதிலிருந்து விடுபட பூண்டை அதிகளவில் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், பூண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சரி வாங்க.... நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும் சுவையான பூண்டு குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் -
தேவையான பொருட்கள்
தக்காளி - 2
புளி - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 40
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
குழம்பு மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அதில் பூண்டை போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த எண்ணெய்யில் கடுகு போட வேண்டும். கடுகு பொரிந்ததும், சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட வேண்டும். இவை சிவந்து வந்ததும், நறுக்கி வைத்த சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமானதும், தக்காளியை போட்டு நன்றாக வதக்க வேண்டும். தக்காளி வெந்ததும் அதில் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.
பின்னர், கரைத்து வைத்த புளியை அதில் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். கொதிக்கும்போது, வறுத்து வைத்த பூண்டை அதில் சேர்க்க வேண்டும்.
நன்றாக கொதித்த பிறகு, எண்ணெய் திரண்டு மேலே வரும்போது, இறக்கி விட வேண்டும்.
சுவையான பூண்டு குழம்பு ரெடி. இந்த பூண்டு குழம்பை, சாதம், இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.