ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிக்கத் திட்டமிட்டுள்ள பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
அயர்லாந்து தவிர்த்த பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிக்கத் திட்டமிட்டுள்ள பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது.
உங்கள் பாஸ்போர்ட் எப்போது வழங்கப்பட்டது?
பிரெக்சிட்டுக்குப் பிறகு, அதாவது, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு, பிரித்தானியர்கள் முன்போல் எளிதாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்குள் நுழைய முடியாது என்பது பலரும் அறிந்த விடயம்தான்.
தங்கள் பாஸ்போர்ட்கள் பயணம் செல்லும் நாளிலிருந்து இன்னும் மூன்று மாதங்களுக்காவது செல்லத்தக்கதாக இருக்கவேண்டும் என்ற ஒரு விதி உள்ளதை பிரித்தானியர்கள் அறிந்திருப்பார்கள்.
ஆனால், இனி, பாஸ்போர்ட் தொடர்பில் கூடுதலாக மற்றொரு விடயம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
அது, உங்கள் பாஸ்போர்ட் எப்போது வழங்கப்பட்டது என்ற விடயமாகும்.
அதாவது, உங்கள் பாஸ்போர்ட்கள், நீங்கள் பயணம் புறப்படும் திகதியிலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டவையாக இருந்தால், நீங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்களில் ஏற அனுமதிக்கப்படமாட்டீர்கள்!
சுவிட்சர்லாந்து முதலான நாடுகளுக்கும் இந்த விதி பொருந்தும்
இந்த விதி, சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, அண்டோரா, மொனாக்கோ, சான் மெரினோ ஆகிய நாடுகளுக்கும் வாட்டிக்கன் நகருக்கும் பொருந்தும்.
ஆக, பயணம் புறப்படும் முன், உங்கள்: பாஸ்போர்ட்டில், 'date of issue' என்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள். அத்துடன், வெளியுறவு அலுவலக இனையதளத்தில் விதிகளை கவனித்து அதன்படி பயணங்களை திட்டமிடுவது நல்லது.