ஐரோப்பாவை வாட்டும் வெப்ப அலை... பிரான்சில் மூடப்படும் பாடசாலைகள், ஈபிள் கோபுரம்
ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை தொடர்ந்து நிலவுவதால், செவ்வாய்க்கிழமை பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டதுடன், ஈபிள் கோபுரத்தின் மேல் தளம் சுற்றுலாப் பயணிகளுக்கு மூடப்பட்டது.
1,350 பாடசாலைகள்
பிராந்தியம் முழுவதும் சுகாதார எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா உலகின் மிக வேகமாக வெப்பமடையும் கண்டம், உலக சராசரியை விட இரண்டு மடங்கு வெப்பமடைகிறது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை தெரிவித்துள்ளது.
இதனால் ஆண்டின் தொடக்கத்தில் தீவிர வெப்ப அலைகள் ஏற்பட்டு, பிந்தைய மாதங்கள் வரை நீடிக்கிறது. பிரான்சில், செவ்வாய்க்கிழமை வெப்பம் உச்சத்தை எட்டும் என்றும், சில பகுதிகளில் 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும்,
மற்ற பகுதிகளில் 36 முதல் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் இருக்கும் என்றும் மெட்டியோ பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அத்துடன் நண்பகல் முதல் பதினாறு துறைகள் மிக உயர்ந்த மட்டத்தில் எச்சரிக்கையாகவும், 68 துறைகள் இரண்டாவது அதிகபட்ச எச்சரிக்கையாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெப்ப அலை காரணமாக சுமார் 1,350 பாடசாலைகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூடப்படும், திங்கட்கிழமை இந்த எண்ணிக்கை 200 என இருந்ததாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஈபிள் கோபுரத்தின் மேல் தளம் மூடப்படும், சுற்றுலாப்பயணிகள் நிறைய தண்ணீர் குடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய தானிய உற்பத்தியாளரான பிரான்சில் விவசாயிகள் இந்த ஆண்டு அறுவடையைத் தொடங்கியுள்ள நிலையில், கடுமையான வெப்பம் காரணமாக வயல்களில் தீ விபத்து ஏற்படும் அபாயத்தையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஐரோப்பா முழுவதும் சுகாதார எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன, குடியிருப்பாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் வெப்ப அலையில் இருந்து தப்பிக்க வழிகளைத் தேடுகின்றனர்.
சுவிஸ் நிறுவனம் ஒன்றின் தரவுகளின் அடிப்படையில், உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 480,000 பேர் வரை வெப்பத்தால் இறக்கின்றனர் என தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |