ஐரோப்பாவை மொத்தமாக வாட்டும் வெப்ப அலை... பிரான்சில் காருக்குள் சடலமாக இரண்டு குழந்தைகள்
ஐரோப்பா முழுவதும், பல நாடுகள் வெப்ப அலை எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், தென்கிழக்கு பிரான்சில், நான்கு மற்றும் இரண்டு வயதுடைய இரண்டு குழந்தைகள் தங்கள் குடும்பத்தினரின் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
நிலை 1 எச்சரிக்கை
மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதி, இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை சாதனைகளை முறியடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள கடுமையான வெப்ப அலைக்கு இலக்காகியுள்ளது.

இந்த நிலையில் பிரான்சில் சிறார்களின் இறப்புக்கு காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றாலும், வெப்ப அலை காரணமாக இருக்கலாம் என்றே அதிகாரிகள் கூறுகின்றனர்.
சம்பவம் நடந்த கார்பென்ட்ராஸ் பகுதியில் திங்கட்கிழமை மதிய வேளையில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வார இறுதியில் Bordeaux நகருக்கு அருகே, கடும் வெப்பநிலையால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக 80 முதல் 95 வயதுக்குட்பட்ட மூன்று முதியவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தற்போது சிறார்கள் இருவரின் மரணம் பதிவாகியுள்ளன.
மட்டுமின்றி, நீச்சல் விபத்துகளில் சிக்கி மேலும் பதின்மூன்று பேர் மூழ்கி மரணமடைந்துள்ளனர். இதனிடையே, பிரான்ஸ் அதிகாரிகள் திங்களன்று அந்நாட்டின் பிரதான நிலப்பரப்பில் உள்ள 96 நிர்வாகப் பிரிவுகளில் 49-ஐ உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய 'நிலை 1' எச்சரிக்கையின் கீழ் கொண்டு வந்தனர்.
அத்துடன், 35 மில்லியன் மக்களை முழுமையான விழிப்புடன் இருக்குமாறும், கடுமையான உடல் உழைப்பைத் தவிர்க்குமாறும், நேரடி சூரிய ஒளியில் செல்வதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தியிருந்தனர்.
செவ்வாய்க்கிழமையன்று மேலும் ஆறு நிர்வாகப் பிரிவுகள் 'சிவப்பு எச்சரிக்கையில்' சேர்க்கப்படவுள்ளன; அதேவேளையில், மற்ற 35 நிர்வாகப் பிரிவுகள் நிலை 2 ஆரஞ்சு எச்சரிக்கையில் தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கும்
இதனிடையே, நாடு முழுவதும் நீண்ட காலத்திற்கு மிக அதிக வெப்பநிலை நிலவவுள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு மற்றும் மத்திய பிரான்ஸ் முழுவதும் திங்கட்கிழமை மதியத்திலிருந்து வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டக்கூடும் என்றும்,
போர்டோவில் 43 டிகிரி செல்சியஸ், லிமோஜஸில் 41 டிகிரி செல்சியஸ், டூலூஸ் மற்றும் டூர்ஸில் 40 டிகிரி செல்சியஸ் மற்றும் பாரிஸில் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்றும், வார இறுதி வரை இது தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலையும் குறைந்தது வெள்ளிக்கிழமை வரை இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு பல நகரங்களில் சுமார் 25 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது; இது ஏற்கனவே இதுவரை இல்லாத புதிய சாதனையாகும்.
திங்களன்று நாடு முழுவதும் 1,300-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன; அதேவேளையில், மாணவர்கள் முன்கூட்டியே வெளியேற ஏதுவாக மேலும் 4,000 பள்ளிகள் தங்கள் வகுப்புகளின் நேரத்தை மாற்றியமைத்தன.
ரயில் பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களுக்கு சேதம் ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக, பாரிஸைச் சுற்றியுள்ள பிராந்திய ரயில் சேவைகளில் பத்தில் ஒன்று ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, பிரான்ஸ் தனது வருடாந்திர தெரு இசை விழாவான Fête de la Musique-ஐ ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தியது. இருப்பினும், சில உள்ளூர் அதிகார அமைப்புகள் அதனை முற்றிலுமாக ரத்து செய்தன, மற்றவை மாலை நேர நிகழ்வுகளை மட்டுமே நடத்தின. பல பகுதிகளில் மது அருந்துவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
ஸ்பெயின், இந்த ஆண்டின் முதல் அதிகாரப்பூர்வ வெப்ப அலையை ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை அறிவித்துள்ளது. சில பகுதிகளில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
தேசிய வானிலை ஆய்வு மையமான 'ஏமெட்' ஞாயிற்றுக்கிழமையன்று பகல் மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும் என்று எச்சரித்ததுடன், வடக்கு பாஸ்க் பிராந்தியத்திற்கு 'சிவப்பு எச்சரிக்கை'யையும் விடுத்தது.
39 டிகிரி செல்சியஸ்
வார இறுதியில் ஜேர்மனியின் தலைநகரில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டியதுடன் கடுமையான இடியுடன் கூடிய மழையும் பெய்ததால், பெர்லின் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தை ஏற்பாட்டாளர்கள் இடைநிறுத்தி, நிகழ்வு நடைபெறும் இடத்திலிருந்து அனைவரையும் வெளியேற்றினர்.
பெல்ஜியத்தில் ஞாயிற்றுக்கிழமையே 30 டிகிரி செல்சியஸைத் தாண்டிய வெப்பநிலை, இதுவரை பதிவானதிலேயே மிக அதிகபட்சமானதாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தெற்கு இங்கிலாந்தின் பெரும்பகுதி மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று கணித்து, வியாழக்கிழமை வரை தீவிர வெப்பம் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதனிடையே, மிலன், டுரின், வெனிஸ், போலோக்னா, புளோரன்ஸ் மற்றும் ரோம் உள்ளிட்ட 12 நகரங்களுக்கு இத்தாலி திங்கள்கிழமை அன்று வெப்ப அலை தொடர்பான 'சிவப்பு எச்சரிக்கை'களை விடுத்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |