வெளுத்து வாங்கும் கனமழை - பல பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை!
நிலவும் சீரற்ற காலநிலையினால் 12 மாவட்டங்களில் 34,492 குடும்பங்களைச் சேர்ந்த 134,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை
இதுவரை மூன்று இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 1,753 குடும்பங்களைச் சேர்ந்த 6,963 பேர் தற்போது 81 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு கடும் மழைக்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இலங்கையை அண்மித்த வளிமண்டல குழப்பம் காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுக்கோள் விடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு விடுமுறை
நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு பல கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை (14) மற்றும் செவ்வாய்க்கிழமை (15) விடுமுறை வழங்க கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி கம்பஹா, களனி, கொலன்னாவ மற்றும் கடுவெல ஆகிய கல்வி வலயங்களின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று (14) மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் நேற்று தெரிவித்திருந்தார்.
வெள்ள அபாய எச்சரிக்கை
களனி ஆற்றின் தாழ் நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் வானிலை நிலைமைகள் தொடர்ந்து அபாயங்களை ஏற்படுத்துவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனிக்குமாறும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |