கடும் பின்னடைவு... ரஷ்ய, வடகொரிய துருப்புகள் தொடர்பில் ஜெலென்ஸ்கி வெளிப்படை
ரஷ்யாவின் தெற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் நடந்த சண்டையில் ரஷ்ய மற்றும் வடகொரிய படைகள் பெரும் இழப்புகளை சந்தித்ததாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
11,000 வட கொரிய துருப்புக்கள்
உக்ரேனிய மற்றும் மேற்கத்திய நாடுகளின் மதிப்பீடுகளின் அடிப்படையில் சுமார் 11,000 வட கொரிய துருப்புக்கள் குர்ஸ்க் பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய எல்லை தாண்டிய ஊடுருவலை நடத்திய பின்னர் உக்ரேனியப் படைகள் குர்ஸ்க் பிராந்தியத்தில் பல பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன.
இந்த நிலையில், உக்ரைன் மக்களுக்கான இரவு நேர காணொளி ஒன்றில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தமது தளபதி ஒருவர் பகிர்ந்துள்ள தகவலை குறிப்பிட்டுள்ளார்.
அதில், உக்ரேனிய எல்லையிலிருந்து அருகாமையில் உள்ள மக்னோவ்கா கிராமத்திற்கு அருகில் போர் நடந்ததாகவும், இதில் ரஷ்ய இராணுவம் வட கொரிய காலாட்படை வீரர்கள் மற்றும் ரஷ்ய பராட்ரூப்களின் பட்டாலியன் ஒன்றையும் இழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான இழப்பு
ஆனால் விரிவான தகவல்களை ஜெலென்ஸ்கி வெளியிடவில்லை. ஒரு பட்டாலியன் என்பது அளவில் வேறுபடலாம் ஆனால் பொதுவாக பல நூறு வீரர்களால் ஆனது என்றே கூறப்படுகிறது.
கடந்த வாரம் ஜெலென்ஸ்கி வெளியிட்டிருந்த காணொளியில், குர்ஸ்க் பிராந்தியத்தில் வட கொரியா துருப்புகளுக்கு கடுமையான இழப்பு என்றும், அவர்களுடன் இணைந்து போரிடும் ரஷ்யப் படைகளால் வடகொரிய துருப்புகள் பாதுகாக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
வடகொரிய துருப்புகள் உக்ரைனிடம் உயிருடன் சிக்காமல் இருக்க, சக இராணுவத்தினரால் கொல்லப்படுவதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |