ரஷ்ய துருப்புக்களைத் தடுக்க தன்னைத்தானே வெடிக்கச் செய்த ஹீரோ! உக்ரைன் கடற்படை கௌரவிப்பு
ரஷ்ய டாங்கிகள் முன்னேற அனுமதிக்கும் பாலத்தை இடிப்பதற்காக தனது உயிரை தியாகம் செய்ததாகக் கூறப்படும் ஒரு கடற்படை வீரருக்கு நன்றி தெரிவித்து உக்ரைன் இராணுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 24-ஆம் திகதி) கிரிமியா பாலம் ஒன்றின் வழியாக முன்னேறிக்கொண்டிருந்த ரஷ்ய துருப்புகளைத் தடுக்க தன்னைத்தானே வெடிக்கச் செய்த உக்ரேனிய கடற்படை வீரர் தனது தியாகத்திற்காக கௌரவிக்கப்பட்டார்.
விட்டலி ஷகுன் (Vitaly Shakun) உக்ரைனின் கெர்சனில் உள்ள ஹெனிசெஸ்க் பாலத்தை நிர்வகித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிரி துருப்புகள் முன்னேறிக்கொண்டிருந்ததால், அவரது பட்டாலியன் பாலத்தை தகர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.
ஷகுன் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, தப்பிக்க நேரமில்லாத காரணத்தினால் அவர் வெடிகுண்டை தானே வெடிக்கப் போவதாகக் கூறினார்.
உக்ரைனின் ஆயுதப்படைகளின் பொதுப் பணியாளர்கள் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவின் படி, அவரது செய்தி கிடைத்த சில நொடிகளில், அவர்கள் வெடிப்புச் சத்தத்தைக் கேட்டனர்.
அவரது வீர தியாகம் ரஷ்ய படை முன்னேறிவருவதை தாமதப்படுத்தியது மற்றும் அவரது தோழர்களை மீண்டும் ஒருங்கிணைத்து மீண்டும் வரிசைப்படுத்த அனுமதித்தது.
அவரது துணிச்சலுக்காக அந்த மாவீரருக்கு மரணத்திற்குப் பிந்தைய விருதுகள் வழங்கப்படும் என்று அவரது தோழர்களின் சமூக வலைதள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


