Hero நிறுவனத்தின் முதல் மின்சார மோட்டார்சைக்கிள் Vida UBX 06 அறிமுகம்
Hero Vida UBX 06 Electric Bike Debuts at EICMA: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் மின்சார மோட்டார்சைக்கிள் Vida UBX 06 அறிமுகமாகியுள்ளது.
Vida UBX 06
இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப், தனது முதல் முழுமையான மின்சார மோட்டார்சைக்கிளான Vida UBX 06 மாடலை EICMA 2026 கண்காட்சியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் இதுவரை மின்சார ஸ்கூட்டர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிறுவனத்தின் மின்சார வாகன வரிசையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.

‘யூப்-எக்ஸ்’ (UBX) என உச்சரிக்கப்படும் இந்த மின்சார மோட்டார்சைக்கிள், உலகளவில் பிரபலமான ‘சூப்பர்மோட்டோ’ (Supermoto) பைக் வடிவமைப்பில் இருந்து ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத் தலைவர் பவன் முஞ்சால் தெரிவித்துள்ளார்.
இந்த பைக் ஆரம்பத்திலிருந்தே மின்சார வாகனமாக வடிவமைக்கப்பட்டதாகவும், நகர்ப்புற மற்றும் இளைஞர் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சிறந்த கட்டுப்பாடு, வேகமான செயல்திறன் மற்றும் எளிதான இயக்க அனுபவத்தை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
விடா UBX 06 மாடல், தற்போதைய மின்சார மோட்டார்சைக்கிள் சந்தையில் ஹீரோவின் முக்கிய போட்டியாளராக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இளைஞர்களை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல், ஸ்டைலான தோற்றத்துடன் தொழில்நுட்ப அம்சங்களையும் கொண்டிருக்கும் என வாகன ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இந்நிகழ்வில் பைக்கின் முழுமையான தொழில்நுட்ப விவரங்கள், பேட்டரி திறன், பயண தூரம் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த மின்சார மோட்டார்சைக்கிள் 2027-ஆம் ஆண்டில் சந்தைக்கு வரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சார வாகனங்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |