ஏவுகணை மழை உறுதி... இஸ்ரேலை நேரடியாக மிரட்டிய ஹிஸ்புல்லா தலைவர்
ஹிஸ்புல்லா தலைவர் நைம் காசிம் தொலைக்காட்சி உரை ஒன்றில் இஸ்ரேலுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகம் அழுத்தம்
லெபனான் மீது மீண்டும் ஒரு விரிவானப் போரை இஸ்ரேல் தொடங்கினால் ஏவுகணைகளால் பழி தீர்க்கப்படும் என்றார். ஹிஸ்புல்லா படைகளின் ஆயுத பலத்தின் எதிர்காலம் தொடர்பில் லெபனான் அமைச்சரவை விவாதித்த நிலையிலேயே நைம் காசிம் இஸ்ரேலை அச்சுறுத்தியுள்ளார்.
ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா படைகளை நிராயுதபாணியாக்குவதற்கு உறுதியளிக்குமாறு ட்ரம்ப் நிர்வாகம் லெபனான் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதுடன், லெபனான் அதிகாரிகள் அந்த திட்டத்தில் தோல்வி கண்டால் இஸ்ரேல் தமது தாக்குதலை உக்கிரப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பாரியதொரு தாக்குதலை லெபனானுக்கு எதிராக இஸ்ரேல் முன்னெடுக்கும் என்றால் ஹிஸ்புல்லா, லெபனானின் இராணுவம் மற்றும் லெபனானின் மக்கள் அதை எதிர்கொள்வார்கள் என்றும் காசிம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடுப்பாட்டம் இஸ்ரேலுக்குள் ஏவுகணை மழைக்கு வழிவகுக்கும் என்றும், எட்டு மாதங்களாக இஸ்ரேல் கட்டிய அனைத்து பாதுகாப்பு அரணும் ஒரு மணி நேரத்திற்குள் சரிந்துவிடும் என்றும் காசிம் தெரிவித்துள்ளார்.
உயிரை விடவும் தயாராக
ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பல மாத சண்டையை நவம்பர் மாதம் அமெரிக்க மத்தியஸ்தம் முடிவுக்குக் கொண்டு வந்தது. அமெரிக்க ஆதரவு இஸ்ரேல் முன்னெடுத்த கொடூர தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட தலைவர்கள் பலர் கொல்லப்பட்டதுடன், ஆயுதங்களின் பெரும்பகுதியையும் ஹிஸ்புல்லா இழந்தது.
அத்துடன், 5,000 ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 13,000 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் காசிம் முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும் ஹிஸ்புல்லா அமைப்பு கட்டுக்கோப்பாக இருப்பதாகவும், தேவை எனில் உயிரை விடவும் தயாராக போராளிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வேறு எந்த விவாதத்திற்கும் முன்னர் இஸ்ரேல் லெபனானில் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதன் மூலம் போர்நிறுத்தத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |