போர் முடிவடைந்தாலும்... உணவுப்பொருட்கள், எரிபொருள் விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி
ஈரான் போர் முடிந்தாலும், உணவுப்பொருட்கள், எரிபொருள் விலைகள் உடனடியாக குறையாது என பிரித்தானிய பிரதமரின் முதன்மைச் செயலர் தெரிவித்துள்ளார்.
ஈரான் போரால் ஏற்பட்டுள்ள தாக்கம்
ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் நடத்திய தாக்குதல், அதைத் தொடர்ந்து பல்வேறு மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் நடத்திவரும் தாக்குதல், அதன் தொடர்ச்சியாக ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள சரக்குக் கப்பல் போக்குவரத்து என பல விடயங்கள் இணைந்து உலக நாடுகள் பலவற்றில் எரிபொருள் முதல் உணவுப்பொருட்கள் வரை உயரக் காரணமாக அமைந்துவிட்டன.
இந்தப் போர் எப்போது முடியும் என்பது தெரியவில்லை. அப்படியே போர் முடிவடைந்தாலும், உடனடியாக விலைகள் குறைய வாய்ப்புள்ளதா?
பிரித்தானியாவைப் பொருத்தவரை, போர் முடிவடைந்தாலும், அதற்குப் பின் எட்டு மாதங்கள் வரையாவது இந்த விலை உயர்வு நீடிக்கும் என்கிறார் பிரித்தானிய பிரதமரின் முதன்மைச் செயலரான டேரன் ஜோன்ஸ் (Darren Jones).
ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள சரக்குக் கப்பல் போக்குவரத்து காரணமாக உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது, என்றாலும், விலைகள் உயரும் என்று கூறியுள்ளார் ஜோன்ஸ்.

எரிபொருள் விலைகள், உணவுப்பொருட்கள் விலைகள், விமான பயணச்சீட்டு கட்டணம் ஆகியவை அதிகமாக இருக்கும் என்கிறார் அவர்.
அத்துடன், போரால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் அம்மோனியா தட்டுப்பாடும் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, இறைச்சி பதப்படுத்தல், குளிர்பானங்களில் சேர்க்கப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, மருத்துவத்துறையில் அதன் பயன்பாடு, மட்டுமின்றி அம்மோனியா உரங்களிலும் பயன்படுத்தப்படுவதால் விவசாயத்துக்கும் பிரச்சினை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |