அமெரிக்காவில் ஒரே நாளில் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!
அமெரிக்காவில் கடத்த 24 மணி நேரத்தில் 277,000-க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இதுவரை ஒரே நாளில் பதிவான பாதிப்புகளில் இதுவே அதிகபட்ச பாதிப்பாகும்.
கடந்த வாரம், அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட விஞ்ஞானி டாக்டர் அந்தோனி ஃபாசி, தொற்றுநோய்களின் மோசமான நிலை இன்னும் வரவில்லை, விடுமுறைக்குப் பிறகு நாடு முக்கியமான கட்டத்தை சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அமேரிக்கா இப்போது அதன் தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
மேலும், வரும் நாட்களில் தொற்று எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது.
கொரோனா தொற்றுநோயால் உலகில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்கா, ஒட்டுமொத்தமாக 20.4 மில்லியன் பாதிப்புகளையும், கிட்டத்தட்ட 350,000 இறப்புகளையும் பதிவு செய்துள்ளது.
மிகப்பெரிய வல்லரசான அமேரிக்கா கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் திணறிவருகிறது. அதன் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ள 13 மில்லியன் டோஸ்களில், 4.2 மில்லியன் மக்கள் மட்டுமே தங்களது முதல் டோஸை பெற்றுள்ளனர்.