துருக்கியில் டோ டிரக்குடன் மோதிய சுற்றுலா பேருந்து: 11 பேர் பலி, 27 பேர் படுகாயம்
Highway Collision in Turkey 11 dead, 27 Injured: துருக்கியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 11 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
துருக்கியில் சாலை விபத்து
ஞாயிற்றுக்கிழமை மேற்கு துருக்கியில் சுற்றுலா பேருந்தும், மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற டோ டிரக்கும் ஒன்றுடன் ஒன்று நேரடியாக மோதிக் கொண்டு விபத்தில் சிக்கின.
இந்த கொடூரமான சாலை விபத்தில் குறைந்தது 11 பேர் வரை உயிரிழந்தனர். மற்றும் 27 பேர் வரை படுகாயமடைந்தனர்.
உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் மனிசா மாகாணத்தில் அகிசார் சுங்கச்சாவடிக்கு அருகே இந்த விபத்தானது நடைபெற்றுள்ளது.
விபத்து தொடர்பாக தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா பேருந்தின் ஓட்டுநர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியான புகைப்படங்களில், மர கட்டைகளை ஏற்றி வந்த டோ டிரக்கும், சுற்றுலா பேருந்தும் சாலையில் கவிழ்ந்து தலைகீழாக கிடைப்பதை பார்க்க முடிகிறது.