இணங்க மறுக்கிறது... ஐரோப்பிய ஒன்றியக் கார்களுக்கான வரிகளை உயர்த்தும் ட்ரம்ப்
பிரஸ்ஸல்ஸுடனான வர்த்தகப் பதற்றத்தை கடுமையாக அதிகரிக்கின்ற வகையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் மீதான வரியை 25 சதவீதமாக உயர்த்த டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.
நலன்களைப் பாதுகாக்க
தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், தாங்கள் முழுமையாக ஒப்புக்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் கடைப்பிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டியதுடன், அதற்கான காரணத்தை அவர் விளக்காமல் தவிர்த்துள்ளார்.

இதனிடையே, அடுத்த வாரம், ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து கார்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் மீது விதிக்கப்படும் சுங்க வரிகளை அதிகரிக்கப் போகிறேன் என்று ட்ரம்ப் வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.
ஆனால் ட்ரம்பின் கருத்துக்கு பதிலளித்துள்ள ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய ஒன்றியத்தின் நலன்களைப் பாதுகாக்க, எங்களுக்கான வாய்ப்புகளை நாங்கள் வெளிப்படையாக வைத்திருப்போம் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியம் தங்களது உறுதிமொழிகளைக் கடைப்பிடித்து வருவதாகவும், அதே சமயம் அமெரிக்காவின் உறுதிமொழிகள் குறித்து அதனிடமிருந்து தெளிவு கோருவதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாகனத் துறையைக் குறிவைப்பதன் மூலம் ட்ரம்ப் மிகவும் நுட்பமான ஒரு இலக்கைத் தெரிவு செய்துள்ளார் என்றே கூறுகின்றனர். ஐரோப்பாவின் பொருளாதாரத்தில் கார் உற்பத்தி ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.

தொடர்ச்சியாக மீறியுள்ளது
இந்த நிலையில், வரி உயர்வுகளை அறிவித்த ட்ரம்ப், ஐரோப்பிய கார் தயாரிப்பாளர்களைத் தங்கள் உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்றிக்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அவர்கள் அமெரிக்கத் தொழிற்சாலைகளில் கார்கள் மற்றும் சரக்கு வாகனங்களைத் தயாரித்தால், எந்தவொரு வரியும் இருக்காது எனவும் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சர்வதேச வர்த்தகக் குழுத் தலைவர் பெர்ண்ட் லாங்கே, எஃகு மற்றும் அலுமினியம் அடங்கிய பொருட்கள் தற்போது சராசரியாக 26 சதவீத சுங்க வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அமெரிக்கா ஒப்பந்தத்தை தொடர்ச்சியாக மீறியுள்ளது என்றார்.
மட்டுமின்றி, இந்த சமீபத்திய நடவடிக்கை, அமெரிக்கத் தரப்பு எவ்வளவு நம்பகத்தன்மையற்றது என்பதை நிரூபிக்கிறது. கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவின் இதுபோன்ற தன்னிச்சையான தாக்குதல்களை நாம் ஏற்கனவே கண்டிருக்கிறோம்; நெருங்கிய நட்பு நாடுகளை இப்படி நடத்துவது முறையல்ல என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |