இமயமலை பனிச்சரிவில் சிக்கிய மலையேற்ற குழுவினர்: 2 பேரின் சடலங்கள் மீட்பு
நேபாளத்தின் இமயமலை பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
பனிச்சரிவில் சிக்கிய மலையேற்ற குழுவினர்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேபாளத்தின் இமயமலை பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் முகாமிட்டிருந்த மலையேற்ற குழுவினர் சிக்கியதை அடுத்து 2 பேரின் உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.
திபெத் எல்லையை ஒட்டிய மனங் மாவட்டத்தில் அமைந்துள்ள 7,126மீட்டர் உயரமுள்ள ஹிம்லுங் ஹிமால் சிகரத்தின்(Himlung Himal peak) சரிவில் இந்த பயங்கரமான பனிச் சரிவானது ஏற்பட்டுள்ளது.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முகாமிட்டிருந்தவர்களில் சுமார் 12 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு மலையேற்ற குழுவினருக்கு முன்னதாக சென்று முகாம் அமைத்து, வழிகளை சீர் செய்து, பாதுகாப்பு கயிறுகளை கட்டச் சென்ற நேபாள மலையேற்ற வீரர்களும், அவர்களின் உதவியாளர்களும் தான் என தெரியவந்துள்ளது.

மோசமான வானிலை
இந்த பகுதியில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
காத்மாண்டுவில் இருந்து அனுபவம் வாய்ந்த மலையேற்ற வீரர்கள் கொண்ட குழு ஹெலிகாப்டரில் அனுப்பப்பட்டிருந்தாலும் அடர்ந்த பனி மற்றும் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகளை தொடர்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.