தன்னை காப்பாற்றிய ராணுவ வீரரையே திருமணம் செய்த சீனப் பெண் - சுவாரஸ்ய தகவல்
2008ஆம் ஆண்டு வென்சுவான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அப்போது 22 வயதான லியாங், அவசரகால மீட்பு நடவடிக்கைகளில் பணிபுரியும் ஒரு ராணுவ வீரராக இருந்தார்.
சுவாரஸ்ய காதல் கதை
அந்த நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் லியு என்ற பெண் சிக்கிக்கொண்டார். 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, லியாங்கும், அவரது குழுவினரும் லியுவை இடிபாடுகளிலிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது லியுவுக்கு வயது 10. குணமடைந்த பிறகு, லியுவும், அவரது குடும்பத்தினரும் ஹுனானின் சுசோவுக்குத் திரும்பினர். தொடர்ந்து 2020ஆம் ஆண்டில், அப்போது 22 வயதான லியு, சாங்ஷாவில் தனது பெற்றோருடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அருகில் அமர்ந்திருந்த ஒருவரைக் கவனித்த லியுவின் தாயார், அவர் 2008இல் லியுவின் உயிரைக் காப்பாற்றிய சிப்பாயைப் போலவே இருப்பதாகக் கூறினார். பின்னர் லியு அந்த நபரிடம் அதைப் பற்றிக் கேட்டார். அதற்கு அவர் ஆமாம் என்று பதிலளித்தார்.
பின் அவர்கள் மொபைல் நம்பர்களை பரிமாறிக் கொண்டு பேச தொடங்கினர். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இதனையடுத்து இருவரும் கடந்த நவம்பர் 29ஆம் தேதி அன்று ஹுனான் மாகாணத்தின் சாங்ஷாவில் நடைபெற்ற வருடாந்திர 'ஹான் ஸ்டைல் கூட்டு திருமண விழாவில்' திருமணம் செய்து கொண்டனர்.
இதுகுறித்து லியு கூறுகையில், "நான் நன்றியுணர்வுக்காக லியாங்கை காதலிக்கவில்லை. மாறாக, அவருடன் ஒன்றாக நேரத்தைச் செலவிட்டபோது, என் வாழ்க்கையில் என்றென்றும் நான் நம்பக்கூடிய நபர் இவர்தான் என்பதை எனக்கு உணர்த்தியது" என தெரிவித்துள்ளார்.
மேலும் லியாங் இதுபற்றி பேசுகையில், அப்போது, அவரை காப்பாற்றுவது என் கடமையாக இருந்தது. ஆனால், இப்போது நான் அவரை உண்மையிலேயே நேசிக்கிறேன். இவை இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். விதி உண்மையிலேயே அற்புதமானது.
லியு என் வாழ்க்கையில் ஒரு ஒளிக்கதிர். நான் சோர்வாக உணரும் போதெல்லாம், அவளுடைய நேர்மறை எண்ணம் என்னை உற்சாகப்படுத்துகிறது. மேலும், வாழ்க்கை இன்னும் நம்பிக்கையால் நிறைந்துள்ளது என்பதை நினைவூட்டுகிறது" என்றார்.
இந்த ஜோடி தற்போது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.