HIV வைரஸுக்கு புதிய மருந்து! மருத்துவ உலகில் மைல்கல்..கிடைத்த அங்கீகாரம்
எச்.ஐ.வி வைரஸ் தொற்றுக்கு லெனகாவிர் என்ற புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லெனகாவிர்
பெருந்தொற்று நோயான எய்ட்ஸை உருவாகும் எச்.ஐ.விஐ (HIV) தடுப்பதற்கான போராட்டத்தில் "லெனகாவிர் (Lenacapavir)" என்ற புதிய ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஜூன் 18ஆம் திகதி அன்று, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) இந்த மருந்தை எச்.ஐ.வி முன் வெளிப்பாடு தடுப்பு மருந்தாக (PrEP - Pre-exposure Prophylaxis) அங்கீகரித்தது.
பின்னர் ஜூன் 19 அன்று உலக சுகாதார அமைப்பு FDAவின் ஒப்புதலை வரவேற்றத்துடன், ஜூலை 14ஆம் திகதி அன்று எச்.ஐ.வி தடுப்புக்கு லெனகாவிர் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது.
இதன்மூலம் லெனகாவிர் மருந்து உலகளவில் அங்கீகாரம் பெற்று வருவதனால் புதிய மைல்கல் ஆக பார்க்கப்படுகிறது.
தடுக்கும் திறன்
இந்த மருந்தானது ஒரே ஒரு ஊசி மூலம் 6 மாதங்களுக்கு எச்.ஐ.வி வைரஸை தடுக்கும் திறன் கொண்டது. எனவே இது எச்.ஐ.வி தடுப்பு சிகிக்சையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை, எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் அல்லது தொற்று ஏற்படும் அபாயத்தில் உள்ளவர்கள் தினமும் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டியிருந்தது. இவை சில சமயங்களில் நோயாளிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
ஆனால், லெனகாவிர் போன்ற நீண்ட காலம் செயல்படும் ஊசி மருந்து, இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. ஏற்கனவே எச்.ஐ.வி தொற்று உள்ள, குறிப்பாக மற்ற எச்.ஐ.வி மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட அல்லது மருந்து எடுத்துக் கொள்வதில் சிரமம் உள்ள பெரியவர்களுக்கு, லெனகாவிர் மற்ற எச்.ஐ.வி மருந்துகளுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது.
எச்.ஐ.வி தொற்று ஏற்படும் அபாயம் உள்ள பெரியவர்கள் மற்றும் 35 கிலோவுக்கு மேல் எடையுள்ள இளம் பருவத்தினருக்கு, 6 மாதங்களுக்கு ஒருமுறை ஊசி மூலம் லெனகாவிர் செலுத்தப்படுவது தொற்றைத் தடுப்பதற்கான வழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |