மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை
டெல்லியில் வன்முறை போராட்டம் வெடித்ததை தொடர்ந்து மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 60 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று விவசாயிகள் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த முயன்றனர், டெல்லி - சிங்கு எல்லை, ஹரியாணா- திக்ரி எல்லை, உத்தரப்பிரதேசம் - காசியாபாத், ராஜஸ்தான் - ஷாஜஹான்பூர், பஞ்சாப் - லூதியானா ஆகிய 5 மாநில எல்லைகளில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி விரைந்தனர்.
அனுமதிக்கப்பட்ட வழிகளை தவிர மற்ற இடங்களிலும் விவசாயிகள் செல்ல முயன்றதால் பொலிசார் தடியடி நடத்தினர்.
போராட்டம் வன்முறையாக வெடிக்கவே, முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.