சிங்கப்பூரில் பள்ளத்தில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய இந்தியர்களுக்கு குவியும் நன்கொடைகள்
சிங்கப்பூரில் திடீரென சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் சிக்கிய பெண்ணைக் காப்பாற்றிய இந்திய புலம்பெயர்ந்தோருக்கு தொடர்ந்து கௌரவங்கள் குவிகின்றன.
சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய பெண்
கடந்த சனிக்கிழமை மாலை, சிங்கப்பூரிலுள்ள Tanjong Katong சாலையில் திடீரென பெரும் சத்தத்துடன் ஒரு பள்ளம் உருவாகியுள்ளது.
தண்ணீர் நிரம்பிய அந்தப் பள்ளத்திற்குள் அவ்வழியாக சென்றுகொண்டிருந்த ஒரு கார் விழுந்துள்ளது.
நடந்ததை கவனித்த சுப்பையா ( Pitchai Udaiyappan Subbiah, 46) என்னும் புலம்பெயர்ந்த இந்தியர், உடனடியாக அங்கு ஓடோடிச் சென்று, தன்னுடன் பணியாற்றிய சில பணியாளர்களுடன் இணைந்து அந்தக் காரிலிருந்த பெண்ணை மீட்டார்.
இந்தியர்களுக்கு கிடைத்துள்ள கௌரவம்
இந்நிலையில், அந்தப் பெண்ணைக் காப்பாற்றிய புலம்பெயர் இந்தியர்களை கௌரவிக்கும் வகையில், ஜனாதிபதி மாளிகைக்கு வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள், ஆகத்து மாதம் 3ஆம் திகதி, ஜனாதிபதி மாளிகையில் சிங்கப்பூர் ஜனாதிபதியான தர்மன் ஷண்முகரத்தினம் (Tharman Shanmugaratnam) அவர்களை சந்திக்க இருக்கிறார்கள்.
பிச்சை உடையப்பன் சுப்பையா (47), மற்றும் அவரது சக பணியாளர்களான வேல்முருகன் முத்துசாமி (27), பூமாலை சரவணன் (28), கணேசன் வீரசேகர் (32), போஸ் அஜித்குமார் (26), நாராயணசாமி மாயகிருஷ்ணன் (25) மற்றும் சதாபிள்ளை ராஜேந்திரன் (56) ஆகிய ஏழு பேரும் ஜனாதிபதியை சந்திக்க இருக்கிறார்கள்.
சமயோகிதமாக விரைந்து செயல்பட்டு சில நிமிடங்களுக்குள் பள்ளத்தில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய சுப்பையா முதலானோரை பாராட்டி சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் ஷண்முகரத்தினம், பேஸ்புக்கில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர், ’Bravo’, பிச்சை உடையப்பன் சுப்பையா முதலான புலம்பெயர் பணியாளர்களுக்கு நன்றி. அவர்கள் விரைவாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டுள்ளார்கள் என்று பாராட்டியுள்ளார்.
குவியும் நன்கொடைகள்
இந்நிலையில், சுப்பையா முதலான ஏழு இந்தியர்களுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் நன்கொடைகளை வாரி வழங்கிவருகிறார்கள்.
சிங்கப்பூரில் பணியாற்றும் புலம்பெயர் பணியாளர்களை கவனித்துக்கொள்ளும் தொண்டு நிறுவனமான ItsRainingRaincoats (IRR), சுப்பையா முதலான ஏழு ஹீரோக்களுக்கும் 1,639 பேர் 72,241 சிங்கப்பூர் டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், சிங்கப்பூரில் பணியாற்றும் புலம்பெயர் பணியாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்பான Ministry of Manpower’s (MOM) Assurance, Care and Engagement (ACE) Group என்னும் அமைப்பும், The ACE Coin என்னும் நாணயத்தை வழங்கி சுப்பையா முதலான ஏழு பேரையும் கௌரவித்துள்ளது.
ஆக மொத்தத்தில், ஒருவருக்கு ஆபத்து என்றதும் முன்பின் யோசிக்காமல் அவருக்கு உதவ விரைந்த சுப்பையா முதலான புலம்பெயர் இந்தியர்களுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |