ஹார்முஸ் நீரிணையை திறப்போம்... ஒரு டசின் போர் கப்பல்களை அனுப்பும் பிரான்ஸ்
ஈரான் போர் இரண்டாவது வாரமாக நீடிக்கும் நிலையில், ஈரானால் மூடப்பட்டுள்ள ஹார்மோஸ் நீரிணையில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் பிரான்ஸ் ஒரு டசின் போர் கப்பல்களை அனுப்ப இருக்கிறது.
தற்காப்பு ஆதரவு
மத்திய கிழக்கில் வெடித்துள்ள போரால் அச்சுறுத்தலுக்கு உள்ளான நட்பு நாடுகளுக்கு தற்காப்பு ஆதரவின் ஒரு பகுதியாக, மத்திய தரைக்கடல், செங்கடல் மற்றும் ஹார்முஸ் நீரிணை ஆகிய பகுதிகளுக்கு பிரான்ஸ் போர் கப்பல்களை அனுப்ப உள்ளது.

சைப்ரஸ் நாட்டிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இதைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி Nikos Christodoulides மற்றும் கிரேக்க பிரதமர் Kyriakos Mitsotakis ஆகியோருடனான சந்திப்புக்கு பின்னர் பேசிய மேக்ரான், சைப்ரஸ் தாக்கப்படும்போது, ஐரோப்பாவும் தாக்கப்படுகிறது என்றார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளதால், ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்டுள்ளன. ஈரான் பதிலுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்களை மொத்தமாக குறிவைத்து தாக்கியது.

ஈரானால் பாதிக்கப்பட்ட
அத்துடன், ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு தடை செய்தது. தடையை மீறும் கப்பல்கள் ஈரானின் கோபத்திற்கு இலக்காகும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால், எண்ணெய் விலை பீப்பாய்க்கு 111 டொலருக்கும் மேலானது. இந்த நிலையில், எங்கள் நோக்கம், கடுமையான தற்காப்பு நிலைப்பாட்டைப் பேணுவதும், ஈரான் அதன் பதிலடியில் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்கு ஆதரவு அளிப்பதும், எங்கள் நம்பகத்தன்மையை உறுதி செய்வதும், பிராந்திய பதற்றத்தைக் குறைப்பதற்கு பங்களிப்பதும் ஆகும் என மேக்ரான் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக, ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்தை மீட்டெடுப்பதே நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மேக்ரானின் இந்த முடிவு, ஈரான் போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரான்ஸும் இணையும் நிலையை உருவாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |