வளைகுடா மொத்தமுள்ள எண்ணெய் வயல்கள் தாக்கப்படும்... மிரட்டல் விடுத்த ஈரான்
தெஹ்ரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குறைந்தது ஐந்து எரிசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கியதைத் தொடர்ந்து, அண்டை நாடுகளில் உள்ள எண்ணெய் வயல்களைத் தாக்கப் போவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது.
200 டொலருக்கு மேல்
தெஹ்ரான் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டு நடவடிக்கை உலகப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க சீர்குலைவை ஏற்படுத்தும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஈரானின் IRGC படைகளின் செய்தித்தொடர்பாளர் குறிப்பிடுகையில், எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றிற்கு 200 டொலருக்கு மேல் ஆகவேண்டும் என்றால், இந்த விளையாட்டைத் தொடருங்கள் என வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
எண்ணெய் விலைகள் உயர்ந்து வருவதால், ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து, அமெரிக்கா சந்தைகளை அமைதிப்படுத்த முயன்று வரும் நிலையில், இஸ்ரேல் இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இஸ்ரேலின் இந்த மூர்க்கத்தனமான தாக்குதலில் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டதாக ஈரானின் எண்ணெய் விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தலைநகரின் அருகிலுள்ள நகரமான கராஜ் நகரில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகள் அப்பகுதி முழுவதும் எதிரொலித்தன, மேலும் அந்தப் பகுதியை புகை மண்டலமாக மாற்றியது.

நடவடிக்கைகள் எடுக்கப்படும்
இந்த நிலையில், தங்களின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால், பதிலடி உறுதி என IRGC படைகளின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் பொதுமக்களையும் எரிபொருள் வசதிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டிய செய்தித் தொடர்பாளர், வளைகுடா நாடுகள் அவர்களை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் அல்லது பிராந்தியத்தில் இதே போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மிரட்டல் விடுத்தார்.

இந்த நிலையில், அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் தெரிவிக்கையில், ஈரானிய எண்ணெய் வசதிகளைக் குறிவைத்து முன்னெடுக்கப்பட்டத் தாக்குதல்கள் இஸ்ரேலால் நடத்தப்பட்டவை என்றும், அமெரிக்கா ஒருபோதும் ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைக்காது என்றும் கூறியுள்ளார்.
உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 4 சதவீதம் ஈரான் உற்பத்தி செய்கிறது, இதில் பெரும்பகுதியை சீனா வாங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |