ஹார்முஸ் நீரிணை விவகாரம்... ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த ட்ரம்ப்
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு மேலும் அனுமதி மறுத்தால் ஈரானின் மின் கட்டமைப்புகளை அமெரிக்கா சில மணி நேரங்களுக்குள் அழித்துவிடும் என டொனால்ட் ட்ரம்ப் கடும் மிரட்டல் விடுத்துள்ளார்.
48 மணி நேரத்திற்குள்
தமது ட்ரூத் சமூக ஊடகத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணையில் 48 மணி நேரத்திற்குள் கப்பல் போக்குவரத்து அனுமதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி 28 ஆம் திகதி இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது திடீரென்று போர் தொடுத்த நிலையில், ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்திற்கு முடக்கப்பட்டது.
ஹார்முஸ் நீரிணை மூடப்படவில்லை என்றும், ஆனால் எதிரிகளின் கப்பல்களுக்கு நீரிணையைக் கடக்க அனுமதி இல்லை எனவும் ஈரான் அறிவித்தது.
ஈரானின் எச்சரிக்கையை மீறிய சுமார் 20 கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்கானது. ஈரானின் அச்சுறுத்தலை அடுத்து கப்பல்களுக்கு காப்பீடு வழங்க லண்டன் நிறுவனம் மறுத்ததை அடுத்து, கப்பல் நிறுவனங்கள் நீரிணையைக் கடக்க மறுத்தது.
இதனால் எண்ணெய் விலை எகிறியது. ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் ட்ரம்ப் நிர்வாகம் கடும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
மட்டுமின்றி ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் இஸ்ரேல் காரணமாக நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகளால் ட்ரம்ப் தனித்துவிடப்பட்டார்.

இந்த நிலையிலேயே, எவ்வித அச்சுறுத்தலுக்கும் இடம் தராமல் ஹார்முஸ் நீரிணையை ஈரான் போக்குவரத்திற்கு அனுமதிக்கவில்லை என்றால் 48 மணி நேரத்தில் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
ட்ரம்பின் மிரட்டல்
மேலும், ஈரானின் மிகப்பெரிய மின் நிலையங்களில் இருந்து தொடங்கி, அவர்களின் மொத்த மின் அமைப்புகளையும் அமெரிக்கா தாக்கி அழிக்கும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஈரானின் மிகப்பெரிய அணுமின் நிலையமானது, பாரசீக வளைகுடாவை ஒட்டி அமைந்துள்ள புஷேர் அணுமின் நிலையமாகும். ட்ரம்ப் விடுத்துள்ள இந்த மிரட்டல், அவர் கடும் அழுத்தத்தில் சிக்கியிருப்பதை உணர்த்துவதாகவே குறிப்பிடுகின்றனர்.
மட்டுமின்றி, மக்கள் வசிக்கும் பகுதிகளையும் அமெரிக்கா தாக்கி அழிக்கலாம் என்றும், ஈரான் மொத்தம் இருளில் மூழ்கலாம் என்றும் கூறுகின்றனர்.

ஆனால், ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவர இருப்பதாக ட்ரம்ப் கூறிய 24 மணி நேரத்தில், ஈரானுக்கு இந்த மிரட்டலை ட்ரம்ப் விடுத்துள்ளார்.
ட்ரம்பின் மிரட்டல் வெளியான உடனையே பதிலளித்துள்ள IRGC-ன் செய்தித்தொடர்பாளர், அமெரிக்கத் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்றும், பிராந்திய எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகளைக் குறிவைக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலின் அழுத்தம் காரணமாக ஈரான் மீது போர் தொடுத்துள்ள ட்ரம்ப் நிர்வாகம், தற்போது அதில் இருந்து வெளியேற முடியாமல் தத்தளித்து வருவதாகவே கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |