இறந்துவிட்டதாக சான்று கொடுத்த மருத்துவமனை நிர்வாகம்: இறுதிச்சடங்கின்போது உறவினர்கள் கண்டறிந்த அதிசயம்
தாயாரின் உடலை தகனம் செய்வதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு அவர் உயிரோடு இருப்பதை மகள் கண்டுபிடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜெண்டினா நாட்டின் ரெஸிஸ்டென்சியா பகுதியில் வசித்து வந்த 89 வயது மூதாட்டி ஒருவருக்கு ஜனவரி 23 ம் திகதி நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற குடும்பத்தினர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவர்களும் மூதாட்டியின் உடல்நிலைக்கு ஏற்ப சிகிச்சையை தொடர்ந்துள்ளனர்.
அடுத்த நாள், உரிய சிகிச்சை அளித்தும் மாரடைப்பு ஏற்பட்டு மூதாட்டி இறந்துவிட்டதாக, மகளிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூதாட்டி இறந்ததற்கான இறப்புச் சான்றிதழையும் மகளிடம் மருத்துவர்கள் வழங்கியுள்ளனர்.
இதனடிப்படையில், மூதாட்டிக்கு இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வெலஸ் சர்ஸ்ஃபீல்டு பகுதியில் உள்ள தகன மேடைக்கு மூதாட்டியின் உடலை எடுத்துச் சென்ற குடும்பத்தினர், இறுதிக்கட்ட சடங்குகளை செய்துள்ளனர்.
அப்போது, தனது தாயார் உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகளை கண்டுபிடித்த மகள், அங்கிருந்த உறவினர்களிடம் இதைப்பற்றிக் கூறியுள்ளார்.
உடனடியாக, இறுதிச்சடங்குகளை நிறுத்திய அவர்கள், மூதாட்டியை வேறொரு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
அங்கு மூதாட்டியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரோடு இருப்பதை உறுதி செய்து சிகிச்சையை தொடர்ந்துள்ளனர்.
பின்னர், தனது தாய் இறந்ததாக கூறிய மருத்துவமனை மீது காவல்நிலையத்தில் மூதாட்டியின் மகள் புகார் அளித்ததுடன், நடந்தவற்றைக் கூறி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனை பதிவு செய்து கொண்ட காவல்துறையினர், அலட்சியமாக சிகிச்சை அளித்ததுடன், உயிரோடு இருக்கும் நபரை இறந்துவிட்டதாக கூறிய மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.
உயிரோடு இருப்பவரை இறந்ததாக இறப்புச்சான்றிதழ் அளித்த மருத்துவமனை நிர்வாகம் மீது மக்கள் கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
செய்தித்தாள்கள் உள்ளிட்டவற்றிலும் மருத்துவமனைக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.