நல்ல உணவு இல்லாததால் உணவு வங்கிகளைத் தேடி ஓடும் புலம்பெயர்ந்தோர்: பிரித்தானிய தொண்டு நிறுவனம் குற்றச்சாட்டு
இங்கிலாந்தில் தங்கவைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர், நல்ல உணவு கிடைக்காததால் உணவு வங்கிகளைத் தேடிச் செல்லும் அவலநிலை உருவாகியுள்ளதாக தொண்டு நிறுவனம் ஒன்று கவலை தெரிவித்துள்ளது.
ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர்
இங்கிலாந்திலுள்ள எசெக்சில் சுமார் 650 புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஏழு ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
அந்த ஹொட்டல்களில் வழங்கப்படும் உணவு அந்த புலம்பெயர்ந்தோருக்கு உகந்ததாக இல்லை என்கிறார் தொண்டு நிறுவனம் ஒன்றில் இயக்குநரான Maria Wilby.
ஆகவே, தங்கள் பகுதியில் எங்கெல்லாம் உணவு வங்கிகள் இருக்கின்றனவோ, அவற்றைத் தேடி புலம்பெயர்ந்தோர் செல்வதாக தெரிவிக்கிறார் அவர்.
SIMON DEDMAN/BBC
தங்களுக்கு வழங்கப்பட்ட சிக்கன் பர்கரும், உருளைக்கிழங்கு சிப்ஸும் பாதி உறைந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கிறார் புலம்பெயர்ந்தோர் ஒருவர்.
மற்றொருவரோ, மிகவும் குறைவான உணவே வழங்கப்படுவதாக தெரிவிக்கிறார். எப்படியாவது பிரித்தானியாவுக்கு வந்துவிடவேண்டும் என 2,000 பவுண்டுகள் செலவிட்டேன், ஆனால், இங்கு எங்களுக்கு வழங்கப்படும் உணவு, நல்ல உணவும் இல்லை, சத்துள்ள உணவும் இல்லை, போதுமான உணவும் இல்லை என்கிறார் Kiro (38) என்னும் அந்த புலம்பெயர்ந்தோர்.
உள்துறை அலுவலகம் சொல்வது என்ன?
பிரித்தானியாவில் 37,000க்கும் அதிகமான புகலிடக்கோரிக்கையாளர்கள் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் உள்துறை அலுவலகம், அவர்களுக்காக, நாளொன்றிற்கு 5.6 மில்லியன் பவுண்டுகள் மக்களுடைய வரிப்பணம் செலவிடப்படுவதாகவும், அவர்களால் அரசுக்கு கடுமையான அழுத்தம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கிறது.
REFUGEE ACTION
அத்துடன், புலம்பெயர்ந்தோர் ஹொட்டல்களில் தங்கவைக்கப்படுவது தற்காலிகமானதுதான் என்றும் உள்துறை அலுவலகம் கூறுகிறது.
மேலும், இந்த புலம்பெயர்ந்தோருக்கு தங்குமிடம் உணவு ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்காக ஒப்பந்த முறையில் பொறுப்பேற்றுள்ள Clearsprings Ready Homes என்னும் நிறுவனம், புலம்பெயர்ந்தோருக்கு நாளொன்றிற்கு மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், ஹொட்டல்களில் எப்போதும் பழங்களும், சிற்றுண்டிகளும் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
அத்துடன், தாங்கள் ஹலால் உணவு உண்போர், வேகன் உணவு உண்போர், மாமிசம் உண்ணாதவர்கள் என பல விடயங்களையும் கருத்தில் கொண்டு உணவு தயாரிப்பதாகவும், ரமலான் போன்ற நேரங்களில், அவர்களுக்கு எந்த நேரத்துக்கு உணவு தேவை என்று கூட பார்த்துப் பார்த்து உணவளிப்பதாகவும் கூறியுள்ளது.
REFUGEE ACTION