ஏமன் ஜனாதிபதி மாளிகை மீது ஹவுதிகள் ஏவுகணைத் தாக்குதல்
Houthis fired missiles at the presidential palace complex: ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் மீது ஹவுதிகள் ஏவுகணைத் தாக்குதல்.
ஏமனின் ஹவுதிகள், தெற்கு நகரமான ஏதனில் உள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் தலைமையிடம்
ஈரான் ஆதரவு ஹவுதிகளுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே நடந்துவரும் மோதலில், ஏதனின் அல்-மாஷிக் அரண்மனை மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும்.

இந்த அரண்மனை, சவுதி அரசின் ஆதரவு பெற்ற மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாங்கத்தின் தலைமையிடமாகும்.
ஹவுதிகளின் தாக்குதலுக்குப் பிறகு யேமன் பிரதமர் ஷாயா அல்-ஜிந்தானி மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று யேமன் தகவல் துறை அமைச்சர் முஅம்மர் அல்-எரியானி தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக ஏமன் அமைச்சரவை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், 16 பேர் காயமடைந்ததாகவும், கொல்லப்பட்டவர்களில் பாதுகாவலர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் அடங்குவதாகவும் யேமனின் சுகாதார அமைச்சர் காசிம் புதைபே தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஹவுதி அமைப்பின் இராணுவச் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரீ கூறுகையில், ஏதனில் உள்ள சவுதி இராணுவ நடவடிக்கைத் தலைமையகம் என்று அவர் குறிப்பிட்ட இடத்தின் மீது தங்கள் போராளிகள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தார்.
சவுதி தரப்பின் கூடுதல் படைகள் எங்கிருந்தாலும் அவற்றை இலக்கு வைப்போம் என்று அந்த அமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்த கொள்கையின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அரண்மனை மீதான தாக்குதல், சவுதி தலைமையிலான கூட்டணியின் கட்டளை மையத்தை ஹவுதிகள் இலக்கு வைத்துள்ளதாகவே கூறப்படுகிறது.

ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ளக் கட்டளை மையம் மூன்று ஏவுகணைகளாலும், ஜனாதிபதி மாளிகையில் உள்ள கூட்டணிப் படைகளின் தலைமையகம் இரண்டு ஏவுகணைகளாலும் தாக்கப்பட்டதாகவும், இதில் யேமன் மற்றும் சவுதி தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்,
ஆனால் குறிப்பிட்ட உயிரிழப்பு எண்ணிக்கையை அவர் தெரிவிக்கவில்லை. ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் போருடன் தொடர்புடைய மோதல்களின் ஒரு பகுதியாக, ஹவுதிகளுக்கும் சவுதி தலைமையிலான கூட்டணிக்கும் இடையே சண்டை தீவிரமடைந்துள்ளது, மேலும் ஏமனில் நிலைமைகள் வேகமாக மோசமடைந்து வருவதாக தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
சிக்கலாக்கியுள்ளது
இந்த மோதல்கள், முதன்மையாக ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளைச் சிக்கலாக்கியுள்ளதோடு, உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளர்களில் ஒன்றான சவுதி அரேபியா தொடர்ச்சியான தாக்குதல்களைச் சந்தித்து வருவதால், உலகளாவிய சந்தைகளை மேலும் உலுக்கியுள்ளன.
தாக்குதல்களுக்காக சவுதி வான்வெளியைப் பயன்படுத்துவது குறித்து விமான நிறுவனங்களுக்கு ஹவுதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பிராந்திய விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா முழுவதும் ஆயிரக்கணக்கான விமானங்கள் தடைபட்டுள்ளன. சவுதி தலைநகரின் சர்வதேச விமான நிலையம், இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து 20 முறை தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது.
கடந்த வார இறுதியில் நடந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதோடு, 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வாரத் தொடக்கத்தில், எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவின் தலைமையகம் ஹவுதிகளின் தாக்குதல்களுக்கு உள்ளானதாகவும், கட்டிடம் சேதமடைந்ததாகவும் சவுதி அரேபியா தெரிவித்தது.