சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு
செங்கடல் கடற்கரையோர சவுதி எண்ணெய் நிலையங்கள் மீது ஹவுதிகள் உக்கிரத் தாக்குதலை நடத்திய நிலையில், இரண்டு வாரங்களில் முதல்முறையாக ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா திடீரென்று நிறுத்தியுள்ளது.
தாக்குதலை நிறுத்தியது
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடங்கிய போரானது தற்போது தீவிரமாக விரிவடைந்து வருவதாகவே தெரிய வருகிறது. ஈரான் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பலமுறை தாக்குதல் நடத்தியுள்ள ஹவுதிகள், தற்போது சவுதி அரேபியா மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்துள்ளனர்.

இது மத்திய கிழக்கை மேலும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளதுடன், எண்ணெய் விலைகள் மீண்டும் கடும் உயர்வை எட்ட காரணமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான தங்கள் கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடர்வதாக சனிக்கிழமையன்று தெரிவித்த அமெரிக்க இராணுவம், கடந்த 13 இரவுகளாகத் தீவிரத் தாக்குதலை முன்னெடுத்து வந்ததை நிறுத்தியதுடன், விளக்கமளிக்கவும் மறுத்துள்ளது.
இந்த இடைநிறுத்தம் குறித்துக் கேட்கப்பட்டபோது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தூதரக ரீதியிலான அணுகுமுறையையே தாம் விரும்புவதாக ட்ரம்ப் எப்போதும் தெளிவாகக் கூறி வந்துள்ளார்; அதேவேளையில், பேச்சுவார்த்தைக்கு ஆக்கபூர்வமாக முன்வரத் தவறினால் என்ன நடக்கும் என்பதையும் அவர் ஈரானுக்கு உணர்த்தியுள்ளார் என்றார்.
இதனிடையே, ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்திய நிலையில், ஈரான் தரப்பில் இருந்து சனிக்கிழமை பதில் தாக்குதல் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
மட்டுமின்றி, ஈரான் மீது ஒரு உக்கிரமானத் தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகி வருவதாக ட்ரம்ப் கூறி வந்த நிலையில், தற்போது அந்த திட்டத்தை அவர் கைவிட்டதாகவும் தகவல் கசிந்துள்ளது.
ஈரான் மீது அப்படியான ஒரு நடவடிக்கையை அமெரிக்கா முன்னெடுக்கும் என்றால், அது இந்த மோதலை இன்னும் விரிவடையச் செய்யும் என்பதுடன், ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்தே ஆயுதப் பற்றாக்குறையால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள அமெரிக்கா மேலும் சிக்கலை எதிர்கொள்ளும் என்பதும் ட்ரம்ப் நிர்வாகத்தை பின்வாங்க வைத்துள்ளது.

மேலும், ஈரான் மீதான கடும் நடவடிக்கைகளால் பாரசீக வளைகுடா நட்பு நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து அந்நியப்படவும் வாய்ப்பு, மட்டுமின்றி எரிசக்தி விநியோகம் மற்றும் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதும் ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்களை பின்வாங்க வைத்துள்ளது என்றும் நியூயார்க் டைம்ஸ் சனிக்கிழமை இரவு செய்தி வெளியிட்டது.
ஹவுதிகளும் முழுமையாக
வளைகுடாப் பகுதியில் அமைதி நிலவியபோதிலும், ஹவுதிகளுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே சனிக்கிழமையன்று நடந்த சண்டையானது, ஏற்கெனவே ஹார்முஸ் நீரிணை வழியாக எரிசக்தி விநியோகத்தைப் பாதித்துள்ள ஈரானுக்கு எதிரானப் போர், இரண்டாவது முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையையும் பாதிக்கக்கூடும் என்பதையும், யேமனின் உள்நாட்டுப் போரை மீண்டும் தூண்டிவிடக்கூடும் என்பதையும் அமெரிக்காவுக்கு சுட்டிக்காட்டியது.

ஈரான் ஆதரவு ஹவுதிகள் யேமனின் தலைநகரான சனாவைக் கைப்பற்றியதிலிருந்து, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஹவுதிகளுக்கு எதிராகப் போரிடும் அரபு கூட்டணிக்கு சவுதி அரேபியா தலைமை தாங்கி வருகிறது.
சண்டையாலும் பஞ்சத்தாலும் மில்லியன் கணக்கான மக்கள் மரணமடைந்த யேமனின் உள்நாட்டுப் போர், 2022 முதல் போர் நிறுத்தம் மூலம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆளானதிலிருந்து ஈரான் நடத்தி வரும் விரிவானப் போரில் ஹவுதிகளும் முழுமையாக இணைந்ததைத் தொடர்ந்து, அந்தப் போர்நிறுத்தம் இந்த மாதம் முறிந்துபோனது.

கடந்த வாரத்தில் சவுதி அரேபியா மீது ஹவுதிகள் ஒரு கடல்வழி முற்றுகையை அறிவித்துள்ளனர்; சவுதியின் அனைத்து எண்ணெய் நிலையங்களும் தாக்குதலுக்கு இலக்காகக்கூடும் என்று ஹவுதி தலைவர் அப்துல் மாலிக் அல்-ஹவுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வியாழக்கிழமையன்று, செங்கடலில் சவுதிக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தினர். ஏற்கனவே இஸ்ரேலுக்கு எதிராக செங்கடலில் ஹவுதிகள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |