சவுதி ராணுவ விமானம் மீது ஹவுதி படையினர் தாக்குதல்: திட்டவட்டமாக மறுத்த கூட்டுப்படை
Houthis Strikes Saudi Arabian Jizan Airport: சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சவுதி அரேபியாவின் முக்கிய உள்கட்டமைப்புகளான விமான நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து கடந்த 48 மணி நேரத்தில் தொடர்ச்சியான பல தாக்குதல்களை நடத்தி இருப்பதாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஹவுதி படையினர் திங்கட்கிழமை டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், ஹவுதி படையினர் நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களின் விவரங்களை பகிர்ந்துள்ளார்.

அதன்படி, சவுதியின் ஜீசான் பகுதியில் உள்ள விமான நிலையம் இலக்கு வைக்கப்பட்டதும், அங்கிருந்த ராணுவ விமானம் மற்றும் ரேடார் அமைப்புகள் ஆகியவையும் சேதமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் தம்மாம் விமான நிலையத்தை குறிவைத்து 2 கட்டங்களாக நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக அங்கு விமான போக்குவரத்தானது பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஹவுதி படையினர் இந்த தாக்குதல் தொடர்பான உரிமை கோரலை ஏமன் அரசின் ஆதரவான சவுதி தலைமையிலான கூட்டுப்படை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அத்துடன் ஹவுதி படையினரால் ஏவப்பட்ட ட்ரோன்களையும், பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றையும் வானிலேயே பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளனர்.