ஏமனைத் தாக்கிய சவுதி அரேபியா... பதிலடி உறுதி என ஹவுதிகள் சபதம்
பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளை சவுதி அரேபியா குறிவைப்பதாக குற்றம் சாட்டிய ஹவுதிகள், அந்நாட்டிற்கு எதிராக பதிலடி உறுதி என சூளுரைத்துள்ளனர்.
விரிவடையும் போர்
ஹவுதிகளின் இந்த நகர்வால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் போர் விரிவடையத் தொடங்கியுள்ளதாகவே அஞ்சப்படுகிறது.

யேமனின் முன்னணி எண்ணெய் உற்பத்திப் பகுதியான ஹொடைடாவில் உள்ள ஹவுதி இராணுவ இலக்குகள் மீது சவுதி அரேபியா வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, ஹவுதிகள் கடல்வழி முற்றுகையை அறிவித்து, சவுதி அரேபியா தொடர்புடையக் கப்பல்களையும் தாக்கியது. மேலும், சவுதி அரேபியாவின் ஒரே மாற்று கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் ஒரே நேரத்தில் முடக்கியுள்ள சூழலில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
ஹொடைடா துறைமுக நகரிலுள்ள கடற்படைத் தளம் மற்றும் கமரன் தீவிலுள்ள இராணுவ முகாம் ஆகியவை சவுதி தரப்பால் இலக்கு வைக்கப்பட்டதாக ஏமன் நாட்டுப் பாதுகாப்புத் துறை வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, செங்கடல் கப்பல் போக்குவரத்தின் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹவுதி அமைப்பின் தளங்களைத் தாக்கியதாகவும், வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த இலக்குகளை அழித்ததாகவும் சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.
இந்த வாரத்தில் இரண்டு சவுதி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஹவுதிகள் உரிமை கோரியதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன; இதில் செங்கடலில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலை சவுதி அரேபியா உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஈரான் தற்போது அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வருவதால், அதன் மீது பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்துவதா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஆனால், பேச்சுவார்த்தைக்கு இதுவரை தங்கள் தரப்பில் இருந்து தயாராகவில்லை என்றே ஈரான் அறிவித்துள்ளது. மேலும், அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாமல் ட்ரம்ப் மட்டுமே ஈரான் பேச்சுவார்த்தைக்கு விரும்புவதாக பொய்யானத் தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் ட்ரம்ப், ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை முன்னெடுக்க மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், அது ஈரானை அச்சுறுத்தும் நடவடிக்கை மட்டுமே என்றும், ஈரான் மீது போர் தொடுப்பதையே விரும்பாத அமெரிக்க மக்கள் எதிர்வரும் தேர்தலின்போது ட்ரம்பிற்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.
இருப்பினும் மத்திய கிழக்கில் மோதல் தணிவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இதனிடையே, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள், அங்கிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடக்கூடும் என்று அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள தளங்களைத் தவிர்க்குமாறு அண்டை நாடுகளின் மக்களுக்கு ஈரானின் புரட்சிகரப் படை அறிவுறுத்தியது.
இதற்கிடையில், குவைத்தின் உடெய்ரியில் உள்ள அமெரிக்கத் தளத்தை இலக்கு வைத்துத் தாக்கியதாகவும், அதில் மூன்று ஆயுதக் கிடங்குகளை அழித்ததாகவும் ஈரானின் புரட்சிகரப் படை தெரிவித்துள்ளது.
பஹ்ரைனைத் தளமாகக் கொண்ட அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாவது கடற்படைப் பிரிவின் கண்காணிப்புக் கோபுரம் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகரப் படை உரிமை கோரியது. இது குறித்த கேள்விகளுக்கு அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் (US Central Command) பதிலளிக்க மறுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |