புலம்பெயர்வோர் பயணித்த படகு மூழ்கியது எப்படி?: உயிர் பிழைத்தவர்கள் கூறிய திடுக் தகவல்
நேற்று முன்தினம் பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கி சிறிய படகு ஒன்றில் 34 புலம்பெயர்வோர் பயணித்த நிலையில், படகு மூழ்கி 27 பேர் உயிரிழந்தார்கள்.
அந்த துயர சம்பவத்தில் இருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவர் ஈராக் நாட்டவர், மற்றவர் சோமாலியாவைச் சேர்ந்தவர்.
குளிர்ந்த நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த அவர்கள், ஹைப்போதெர்மியா என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பிரான்சிலுள்ள மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் பிரான்ஸ் பொலிசாரிடம், விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து கூறியதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
இந்த புலம்பெயர்வோர் 34 பேரும், சிறிய ரப்பர் படகு ஒன்றில் பயணித்துள்ளார்கள்.
இந்த புலம்பெயர்வோர் அந்த பலவீனமான படகில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, அவ்வழியே கண்டெய்னர்களை ஏற்றி வந்த கப்பல் ஒன்று படகின்மீது மோதியுள்ளது. கப்பல் மோதியதில் ரப்பர் படகில் துவாரம் விழ, அது தண்ணீரில் மூழ்கியுள்ளது.
தற்போது அந்த படகின் படமும் வெளியாகியுள்ளது. அது படகு என அழைக்கப்பட்டாலும், காற்றடிக்கப்பட்ட பலூன் போலத்தான் உள்ளதைக் காணலாம்.