புதிதாக தெரிவான பாப்பரசர்... அவருக்கு வழங்கப்படும் மாத சம்பளம் எவ்வளவு?
ரோமன் கத்தோலிக்க திருச்சபை முதல் முறையாக அமெரிக்க நாட்டவர் ஒருவரை பாப்பரசராக தெரிவு செய்துள்ளது.
267வது பாப்பரசராக தெரிவு
அமெரிக்காவின் சிகாகோவில் பிறந்த 69 வயதான ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் என்பவர் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 267வது பாப்பரசராக தெரிவாகியுள்ளார். அவர் இனி லியோ XIV என்று அழைக்கப்படுவார்.
அமெரிக்காவில் இருந்து தெரிவாகும் முதல் பாப்பரசர் இவர் என்றாலும், பெருவில் பல ஆண்டுகள் மிஷனரியாகச் செலவிட்டதால், அவர் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கார்டினல் போலவே கருதப்படுகிறார்.
பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை அடுத்து புதிதாக தெரிவாகியுள்ள பாப்பரசர் லியோவின் அனைத்து தேவைகளையும் உலகின் மிகச் சிறிய சுதந்திர நாடான வத்திக்கான் பூர்த்தி செய்கிறது.
பொதுவாக பாப்பரசர் ஒருவருக்கு சம்பளம் என தொகை எதுவும் வழங்கப்படுவதில்லை. ஆனால், அவருக்கான உணவு, தங்கும் வசதி, பயணச்செலவு, மருத்துவ உதவிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவையை வத்திக்கான் கவனித்துக்கொள்கிறது.
பிரான்சிஸ் பாப்பரசருக்கு வத்திக்கான மாதந்தோறும் 2,500 யூரோ தொகையை சம்பளமாக வழங்கி வந்துள்ளது. இது அவரது முடிவு என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் செயல்பட்ட பாப்பரசர்களும் பெருந்தொகையை சம்பளமாகப் பெற்றுக்கொண்டதில்லை என்றே தெரிய வந்துள்ளது.
பெருந்தொகை நன்கொடை
பாப்பரசர் பிரான்சிஸ் மறைவின் போது அவருக்கிருந்த மொத்த சொத்து மதிப்பு 12 மில்லியன் யூரோ என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி ரோமானிய சிறைச்சாலையின் கைதிகளுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் 200,000 யூரோ தொகையை நன்கொடையாக வழங்கினார்.
வத்திக்கான் நாட்டிற்கு என அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் இத்தாலியில் இருந்து பெருந்தொகை நன்கொடையாக அளிக்கப்படுகிறது. ஆனால் 2023ல் வத்திக்கான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, 70 மில்லியன் யூரோ பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அறிவித்தது.
இதனையடுத்து மாதம் தோறும் 4,000 முதல் 5,500 யூரோ சம்பளமாக பெற்றுவந்துள்ள கார்டினல்களுக்கு 10 சதவீதம் குறைவாக வழங்கப்பட்டது. ஆயர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் 3,000 யூரோ சம்பளமாக வழங்கப்படுகிறது.
ஆனால், ரோமில் செயல்படும் பாதிரியார்களுக்கு மாதம் 1,200 யூரோ மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனால், புதிதாக தெரிவாகியுள்ள பாப்பரசர் லியோவும் மாதந்தோறும் 2,500 யூரோ தொகையை சம்பளமாகப் பெற வாய்ப்புள்ளது என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |