SIR படிவத்தை ஆன்லைன் மூலம் நிரப்பும் வசதி - எப்படி செய்வது?
SIR படிவத்தை ஆன்லைன் மூலம் எப்படி நிரப்புவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணியை(SIR) இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
நவம்பர் 4 ஆம் திகதி முதல் டிசம்பர் 4 ஆம் திகதி வரை வரை வாக்காளர்களின் இல்லங்களுக்குச் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் நடவடிக்கை நடைபெறும் பணியை தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் ரசாயன தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்? - ஆபத்தான ரிஸின், 350 கிலோ வெடிமருந்து பறிமுதல்
இந்த தீவிர திருத்தத்தின் படி, டிசம்பர் 9ஆம் திகதி வரைவு பட்டியல் வெளியாகும்.
டிசம்பர் 9 ஆம் திகதி முதல் ஜனவரி 8, 2026 வரை ஆட்சேபனைகள் மற்றும் உரிமைகோரல்களை தெரிவிக்கலாம். உங்கள் பெயர் விடுபட்டிருந்தால், இந்த காலத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஜனவரி 31ஆம் திகதி வரை வாக்காளர்களின் குறைகளை கேட்கும் நடவடிக்கைகள் மற்றும் அவர்களுடைய விண்ணப்பங்களை சரி பார்க்கும் நடவடிக்கைகள் நடைபெறும். பிப்ரவரி 7 ஆம் திகதி திருப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இணையதளம் மூலம் நிரப்புவது எப்படி?
இந்நிலையில், இணையதளம் வாயிலாகவே, சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியலுக்கான கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) நிரப்பும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Online Facility for Filling up of Enumeration Form at ECI Website.#ECI#SIR pic.twitter.com/UDUGvbi3v5
— TN Elections CEO (@TNelectionsCEO) November 9, 2025
இந்த படிவத்தைப் பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம்/சிக்கல் ஏற்பட்டால், இணையதளத்தில் உள்ள "Book a call with BLO" என்ற வாய்ப்பைப் பயன்படுத்தியோ அல்லது 1950 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டோ உங்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் (BLO) உதவி கேட்கலாம்.

இவ்வாறு விண்ணப்பிக்க, https://voters.eci.gov.in என்ற இணையதளத்தில், மொபைல் எண் அல்லது ஈமெயில் முகவரி அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு, மொபைல் எண்ணுக்கு வரும் OTPயை உள்ளிட்டு உள்நுழைய (Login) வேண்டும்.

நீங்கள் புதிய நபராக இருந்தால், உங்கள் மொபைல் எண் மற்றும் ஈமெயில் முகவரி உள்ளிட்டு மொபைல் எண் மற்றும் ஈமெயில் முகவரிக்கு வரும் OTPயை உள்ளிட்டு பதிவு(Sign-Up) செய்து உள்நுழைய வேண்டும்.
அதில், 'Fill Enumeration Form' என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் உங்கள் மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும். அதனையடுத்து, தோன்றும் பெட்டியில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை என்னை உள்ளிட்டு Search என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
இப்போது, உங்கள் தகவல்கள் பாதியளவு நிரப்பப்பட்ட Enumeration Form திரையில் காண்பிக்கப்படும். இந்தத் தகவல்களை முழுமையாகச் சரிபார்க்க வேண்டும்.
மொபைல் எண்ணை இணைக்க
வாக்காளர் அடையாள அட்டையுடன் உங்களது மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த விண்ணப்பத்தை நீங்கள் முழுவதும் பூர்த்தி செய்ய முடியும்.
மொபைல் எண் இணைக்கப்படாமல் இருந்தால், அதே பக்கத்தில் கீழே கொடுத்துள்ள Click here என்பதை தேர்வு செய்து படிவம் 8-ஐ நிரப்ப வேண்டும்.
இதில் "Apply For Correction" என்பதை தேர்வு செய்து, குறிப்பிட்ட இடத்தில் உங்களது மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
அதன் பின்னர், ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு நீங்கள் ஆன்லைனிலேயே கையொப்பமிட வேண்டி இருக்கும். அதன் பின்னர் வரும் OTPயை உள்ளீடு செய்தால் வாக்காளர் அட்டையுடன் உங்களது மொபைல் எண் இணைக்கப்பட்டு விடும்.
இதில் 3 தேர்வுகள் இருக்கும்.
தேர்வு 1 - முந்தைய SIR இல் பெயர் இருந்தால்
கடைசியாக 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டில் SIR நடைபெற்றதால், 1984-க்குப் பிறகு பிறந்த பலரது பெயர் அந்த பட்டியலில் இடம்பெற்றிருக்காது.
முந்தைய SIR இல் உங்கள் பெயர் இருத்தால், அப்போதைய சட்டமன்றத் தொகுதி, வாக்குச் சாவடி மற்றும் வரிசை எண்ணைப் பயன்படுத்தி தேடுங்கள்.
உங்கள் விவரங்கள் சரியாக இருந்தால், Continue என்பதை கிளிக் செய்யுங்கள்.
பிறந்த திகதி , ஆதார் எண், தந்தை/தாய்/துணைவரின் பெயர் போன்ற உங்கள் விவரங்களை நிரப்பி, உங்கள் புகைப்படத்தைப் பதிவேற்றவும்.
இறுதியாக, உங்கள் முகவரி விவரங்களை வழங்கி "Submit" என்பதைக் கிளிக் செய்யவும்.
தேர்வு 2 - 2002 SIR இல் உங்கள் உறவினர் பெயர் இருந்தால்
உங்கள் தந்தை/தாய்/தாத்தா/பாட்டி ஆகியோரின் 2002 வாக்காளர் விவரங்களைப் பயன்படுத்தி தேடி, சரியான உறவைத் தேர்வு செய்ய வேண்டும்.
அவர்களின் விவரங்கள் சரியாக இருந்தால், Continue என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் பின்னர், தேர்வு 1 இல் உள்ளதைப் போலவே, உங்கள் அனைத்து விவரங்களையும் நிரப்பி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு 3 - உங்கள் பெயரோ, உறவினரின் பெயரோ 2002 பட்டியலில் இல்லாவிட்டால்
இதில், 2002 ஆம் ஆண்டு முதல் எந்த விவரங்களையும் நீங்கள் வழங்க வேண்டியதில்லை.
நீங்கள் உங்கள் தனிப்பட்ட விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து உங்கள் புகைப்படத்தை பதிவேற்றினால் போதும். இந்த முறையில் எந்த ஆவணங்களையும் பதிவேற்றும் விருப்பம் இல்லை.
தேவையான ஆவணங்கள் தொடர்பான தகவலுக்கு, உங்கள் தேர்தல் அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
அனைத்து தகவல்களையும் நிரப்பிய பிறகு, submit என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
சமர்ப்பித்த பின், உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ள ஒரு ஒப்புதல் எண் (Acknowledgement Number) வழங்கப்படும். இதை அவசியம் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரும் ஆதார் அட்டையில் உள்ள பெயரிலும் வேறுபாடு இருந்தால் சிக்கல்கள் ஏற்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |