மிதிவண்டியை விட மெதுவாக செல்லும் ரயில் - தமிழ்நாட்டில் எங்கே உள்ளது தெரியுமா?
இந்தியா உலகின் மிகப்பெரிய ரயில்வே கட்டமைப்பை கொண்டுள்ள நாடுகளில் ஒன்று.
பயணிகளின் பயண நேரத்தை குறைக்கும் வகையில், தற்போது வந்தே பாரத், தேஜஸ், சதாப்தி ஆகிய அதி வேக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், 2030 ஆம் ஆண்டில், மும்பை மற்றும் அகமதாபாத் இடையே மணிக்கு 308 கிமீ வேகத்தில் ஓடும் இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை இயக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
நீலகிரி மலை ரயில்
அதேவேளையில், மிதிவண்டியை விட மெதுவாக செல்லும் ரயில் ஒன்று இந்தியாவில் இயக்கப்பட்டு வருகிறது, அதுவும் தமிழ்நாட்டில்.

தமிழ்நாட்டில், மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே 200 ஆண்டுகளுக்கு மேலாக ஓடும் நீலகிரி மலை ரயில் தான் இந்தியாவின் மிக மெதுவாக ஓடும் ரயில் ஆகும்.
மேட்டுப்பாளையம் நிலையத்திலிருந்து கிளம்பும் இந்த நீலகிரி மலை ரயில், குன்னூர், வெலிங்டன், லவ்டேல் ஆடர்லி ரன்னிமீட் வழியாக பயணித்து ஊட்டியை (உதகமண்டலம்) வந்தடைகிறது.

இந்த நீலகிரி மலை ரயில், முதலில் 1854 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டது. மலைப்பாங்கான பகுதியில் இருந்த சிக்கல்கள் காரணமாக 1891 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, 1908 ஆம் ஆண்டு பணிகள் நிறைவடைந்தது.
ஏன் குறைந்த வேகம்?
மணிக்கு 10 கிமீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், மொத்தமுள்ள 46 கிமீ தூரத்தை 5 மணி நேரத்தில் கடக்கிறது.

இந்தியாவின் வேகமான ரயிலை 20 மடங்கு குறைவான வேகத்தில் சென்றாலும், மலைகள், காடுகள், நீர்வீழ்ச்சிகள் வழியாக சென்று, 208 வளைவுகள், 16 சுரங்கபாதைகள் மற்றும் 250க்கும் மேற்பட்ட பாலங்களை கடக்கிறது.

கூர்மையான வளைவுகள் மற்றும் செங்குத்தான மலை சரிவு காரணமாகவே இந்த ரயில் இவ்வளவு குறைந்த வேகத்தில் செல்கிறது.
பழங்கால நீராவி எஞ்சின்கள் மூலம் இயங்கும் இந்த ரயிலை, 2005 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |