வங்கிகளில் உரிமை கோரப்படாமல் உள்ள ரூ.78,000 கோடி - உங்கள் பணத்தை எப்படி தேடுவது?
வங்கிகளில் உரிமை கோரப்படாமல் ரூ. 78,000 கோடி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உரிமை கோரப்படாமல் உள்ள பணம்
இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருக்கும் பலர் அந்த கணக்கை மறந்து விட்டாலோ, அல்லது வங்கி கணக்கு வைத்திருப்பவர் இறந்து விட்டால், அவர்களின் குடும்பத்தினர் அந்த பணத்தை உரிமை கோராமல் விட்டாலோ 10 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த பணம் உரிமை கோரப்படாத பணமாக கருதப்படுகிறது.

அந்த பணம் ரிசர்வ் வங்கியின் வைப்புத்தொகையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு (DEA) நிதிக்கு மாற்றப்படும்.
இவ்வாறாக இந்தியாவின் வங்கிகளில் ரூ. 78,000 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மோடி அழைப்பு
இது குறித்து பேசிய அவர், "நாட்டின் வங்கிகளில், நமது குடிமக்களின் ரூ.78,000 கோடி பணம் உரிமை கோரப்படாமல் உள்ளது. காப்பீட்டு நிறுவனங்களிடம் ரூ.14,000 கோடியும், டிவிடெண்டில் ரூ.9,000 கோடியும், மியூச்சுவல் பண்ட் நிறுவங்களிடம் ரூ.3,000 கோடியும் உள்ளது.

இந்தப் பணம் யாருடையது என்று எங்களுக்குத் தெரியாது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு சொந்தமானதாக இருக்கும். பணத்தின் உரிமையாளர்களை கண்டறிந்து, அதனை திருப்பி தரும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.
இதற்காக நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது வரை பல கோடி ரூபாய் உரிய மக்களிடம் சேர்க்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
UDGAM மூலம் பணத்தை பெறுவது எப்படி?
இவ்வாறாக உரிமை கோரப்படாத பணம் குறித்து தேட UDGAM (Unclaimed Deposits-Gateway to Access information) என்ற இணையதளத்தை ரிசர்வ் வங்கி தொடங்கியது. இந்த திட்டத்தில் சுமார் 30 வங்கிகள் தற்போது வரை இணைந்துள்ளது.
இந்த இணையதளத்தில், பயனர்கள் தங்களது பெயர் மற்றும் மொபைல் எண் மூலம் பதிவு செய்து உரிமை கோரப்படாத பணம் குறித்து தேடலாம்.

கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்டு, .பான் கார்டு/வாக்காளர் அட்டை /பாஸ்போர்ட்/ஓட்டுநர் உரிம எண்/பிறந்த தேதி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அடையாளச் சான்றினைச் சமர்ப்பித்து தேட முடியும்.
அவ்வாறு கண்டறியப்பட்ட உடன் உரிமைகோரால் கணக்கு அல்லது வைப்புத்தொகை இருக்கும் வங்கியைப் பார்வையிடவும். அதன் பின்னர், உங்களைப் பற்றியும் கணக்கைப் பற்றியும் தொடர்புடைய அனைத்து விவரங்களுடனும் "உரிமைகோரல் படிவத்தை" நிரப்பவும்.
KYC ஆவணங்கள், புகைப்படங்கள் போன்ற தொடர்புடைய ஆவணங்களுடன் படிவத்தை சமர்ப்பிக்கவும். நீங்கள் ஒரு சட்டப்பூர்வ வாரிசாக இருந்தால், கணக்கு வைத்திருப்பவரின் இறப்புச் சான்றிதழின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் எப்போது வேண்டுமானாலும் இந்த பணத்தை கோரலாம். இதற்கு எந்த கால அவகாசமும் இல்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |